×

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விதிகளின்படி கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் 11 மருத்துவ கல்லூரிகள் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டுமென்று தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகளை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 11 கல்லூரிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கட்டப்படும் புதிய மருத்துவ கல்லூரிகள், மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் 2010ம் ஆண்டைய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மருத்துவ கல்லூரிகள் கட்டக் கோரியுள்ளார். தற்போது மருத்துவ கவுன்சில் தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்டு, 2018 மற்றும் 2020ம் ஆண்டுகளில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளது. அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.அரசு தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவ கல்லூரிகளை கட்ட வேண்டும். புதிய விதிகளின்படி மருத்துவ கல்லூரிகளின் கட்டுமானங்கள் அமைந்துள்ளதா என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும். இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு அனுமதி கோரி, தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Tamil Nadu ,ICC ,National Medical Commission , 11 new medical colleges to be set up in Tamil Nadu to be inspected as per rules: ICC orders National Medical Commission
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...