* மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
* ஒரே நாளில் 81,466 பேர் பாதிப்பு
புதுடெல்லி: சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால், புனே உள்ளிட்ட பல மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை இம்மாத நடுவில் உச்சத்தை தொடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த 23 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 81,466 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு தினசரி பாதிப்பு 81 ஆயிரத்தை தாண்டியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக, கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி 81,484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு தற்போது மீண்டும் அந்த எண்ணிக்கையை தொட்டுள்ளது.
இதே போல, கடந்த 24 மணி நேரத்தில் வைரசால் பாதிக்கப்பட்ட 469 பேர் பலியாகி இருப்பதும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 23 லட்சத்து 3,131 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 63,396 ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 6 லட்சத்து 14,696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோரின் சதவீதம் 93.47 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா 2வது அலை இந்தியாவில் ஏப்ரல் மாத நடுவில் உச்சத்தை தொட ஆரம்பிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். முதல் அலையை வைத்து கணிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வில், ஏப்ரல் 15-20ம் தேதி நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டத் தொடங்கி, மே மாத இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் அதிகமான பாதிப்பு இருக்கும் நிலையில், அடுத்ததாக பஞ்சாப்பில் பாதிப்பு உயரத் தொடங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் 4வது அலை
கொரோனா பரவல் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்து, மகாராஷ்டிராவின் புனேவில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. இன்று முதல் ஒருவாரத்திற்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும், ஓட்டல்கள், பார்கள், மால்கள் அனைத்தும் ஒரு வாரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணம், இறுதி சடங்குகள் தவிர வேறெந்த சுப நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. அனைத்து வழிபாட்டு தலங்களையும் ஒருவாரத்திற்கு மூட மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதே போல், மத்திய பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டீஸ்கரில் துர்க் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 11ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா 4வது அலை ஏற்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு எதுவும் பிறப்பிக்கப்படாது என்றும் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.
கணவருக்கு கொரோனா பிரியங்கா பிரசாரம் ரத்து
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்திக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனாலும், டாக்டர்கள் பரிந்துரைப்படி தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். இதன் காரணமாக, தமிழ்நாடு, அசாம், கேரளாவில் அவரது தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.