8 அணிக்காக விளையாடியவர்!

அதிக ஐபிஎல் அணிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமைக்கு உரியவர், ஆஸ்திரேலியாவின் ஒருநாள், டி20 அணிகளின் கேப்டன் ஆரோன் பிஞ்ச். 2010ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார். தொடர்ந்து டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காகவும், கடைசியாக 2020 சீசனில் ஆர்சிபி அணிக்காகவும் விளையாடி உள்ளார். அந்த சீசனுடன் பெங்களூர் அணி அவரை விடுவித்துவிட்டது. இந்த ஆண்டு 1 கோடி அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில்  யாரும் ஏலம் எடுக்கவில்லை. இதுவரை 87ஆட்டங்களில் 2005 ரன் (அதிகம் 88, அரைசதம் 14) விளாசியுள்ளார்.

* சன்ரைசர்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் (ஆஸி.), நடுவரிசை ஆட்டக்காரர் கேன் வில்லியம்சன் (நியூசி.), உதவி பயிற்சியாளர் பிராட் ஹாடின் (ஆஸி.) ஆகியோர் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.  அதனை சர்ரைசர்ஸ் நிர்வாகம், ‘கழுகுகள்  வந்து விட்டன’ என்று  உற்சாகமாக குறிப்பிட்டுள்ளது.

* ஒரே கேப்டனின் கீழ் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் சாஹல் முதலிடத்தில் இருக்கிறார். அவர் விராத் தலைமையின் கீழ் பெங்களூர் அணிக்காக 118 விக்கெட் அள்ளியுள்ளார். அடுத்து சிஎஸ்கே டோனியின் தலைமையில்  பிராவோ 109 விக்கெட், அஷ்வின் 98 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். மும்பை கேப்டன் ரோகித் தலைமையில் பும்ரா 97 விக்கெட் எடுத்துள்ளார். அஷ்வினை தவிர மற்ற மூவரும் அதே கேப்டனின் தலைமையில் இந்த சீசனிலும் விளையாட உள்ளனர். அஷ்வின் இப்போது ரிஷப் தலைமையிலான டெல்லி அணிக்காக விளையாட உள்ளார்.

* ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த முகமது ஷமி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த தொடரிலும் விளையாடவில்லை. தற்போது முழு உடல்தகுதியுடன் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். மும்பையில் முகாமிட்டுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை  63 ஆட்டங்களில் 60 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

Related Stories:

>