மயாமி ஓபன் டென்னிஸ் பைனலில் ஆஷ்லி, பியான்கா

மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஆஷ்லி பார்தி (ஆஸி.), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) மோத உள்ளனர்.முதல் அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸ்திரேலியா), 5ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) மோதினர். நடப்பு சாம்பியனான ஆஷ்லி சிறப்பாக விளையாடி 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று தொடர்ந்து 2வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் ஒரு மணி, 29 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. 2019ல் ஆஷ்லி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த தொடர் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

2வது அரையிறுதியில் உலகின் 9ம் நிலை வீராங்கனை பியான்கா ஆண்டிரீஸ்கு, 23ம் நிலை வீராங்கனை மரியா சக்கரி (கிரீஸ்) மோதினர். காலிறுதியில் உலகின் 2ம் நிலை வீராங்கனை நவோமி ஒசோகாவை எளிதில் வீழ்த்திய மரியா நேற்று பியான்காவுக்கும் கடும் சவாலாக இருந்தார். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை 7-6 (9-7) என்ற கணக்கில் பியான்கா போராடி வென்றார். தொடர்ந்து 2வது செட்டை மரியா 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். இருவரும் 1-1 என சமநிலை வகிக்க, டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்ட 3வது செட்டை 7-6 (7-4) என்ற கணக்கில் போராடி வென்ற பியான்கா பைனலுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஷ்லி பார்தி - பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகின்றனர்.

Related Stories:

>