×

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு !

டெல்லி: டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், புலனாய்வு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய 56 சிபிஐ அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, சைபர் மற்றும் ஹைடெக் குற்ற  விசாரணை மற்றும் பயிற்சி மையம், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தடுப்பு, இன்டர்போல் ஒருங்கிணைப்பு பிரிவு, ஊழல் எதிர்ப்பு பிரிவு, பொருளாதார குற்றங்கள், வங்கி  மோசடிகள், போதை மருந்துகள், வனவிலங்குகள் கடத்தல், ஆள் கடத்தல், கொலை சம்பவங்கள், வன்முறை வழக்குகள், குண்டு வெடிப்பு போன்ற பல்வேறு சிக்கலான வழக்குகளை விசாரித்து வருகிறது.

மிகவும் நம்பத்தகுந்த புலனாய்வு அமைப்பாக கருதப்படும் சிபிஐயில் சிறப்பாக பணியாற்றிய 56 அதிகாரிகளுக்கு சிபிஐ-யின் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.10,000 வரை ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.சி.ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ‘சிபிஐ-யின் 59வது அறக்கட்டளை தினத்தில் பல்வேறு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 14 விசாரணை அதிகாரிகள், ஆறு அரசு அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப அதிகாரிகள் மற்றும் இதர அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. சிபிஐ இயக்குநர் (பொறுப்பு) பிரவீன் சின்ஹா, சான்றிதழ் பெற்ற தனது சகாக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது சிபிஐ அதிகாரிகளிடம் பேசிய சின்ஹா, ‘அரசியல், சட்டம், நீதிமன்றங்கள், மாநில அரசுகள் என்று ஏராளமான விவகாரங்களுக்கு மத்தியில் சிறப்பாக பணியாற்றி வருகிறது. சிக்கலான பல விவகாரங்களை நீதிமன்றங்களும், மாநில அரசுகளும் சிபிஐக்கு பரிந்துரை செய்து வருகின்றன. அதுவே சிபிஐ மீதான நம்பகத்தன்மையை உறுதிபடுத்துகின்றன. கொரோனா காலத்தில் சிபிஐ அதிகாரிகள், ஊழியர்கள் திறம்பட தங்களது பணிகளை மேற்கொண்டதை பாராட்டுகிறேன்’ என்றார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர்கள் அஜய் பட்நாகர் மற்றும் டி.சி.ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Delhi , Delhi, Intelligence, CBI officials, praise
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு