பாஜவுடன் கூட்டணி அமைத்து தனக்குத்தானே சவக்குழியை வெட்டிக் கொண்ட அதிமுக: பாலகிருஷ்ணன் தாக்கு

நெல்லை: பாஜ கால் பதிக்க இடமளித்தால், தமிழகத்தில் இருண்ட காலம் துவங்கி விடுமென மேலப்பாளையத்தில் பிரசாரம் செய்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். நெல்லை மாவட்டம் பாளை. தொகுதி திமுக வேட்பாளர் அப்துல்வகாப்பை ஆதரித்து மேலப்பாளையம் பஜார் திடலில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் பாஜ கால் பதிக்க இடமளித்து விடக்கூடாது. அப்படி இடமளித்து விட்டால் தமிழகத்திற்கு இருண்ட காலம் துவங்கி விடும். பாஜவை நுழைய விடாமல் தடுக்க பாளையில் திமுக வேட்பாளர் அப்துல்வகாப்புக்கு மக்கள் அமோக ஆதரவளிக்க வேண்டும்.

அதிமுக தனித்து நின்றால் கூட மக்கள் ஓரளவு ஓட்டுப்போட வாய்ப்புள்ளது. ஆனால் பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளதால், தனக்குத்தானே சவக்குழியை வெட்டிக் கொள்வதற்கு சமமானதாகும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் வெற்றி பெறுவார்கள் என கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரியணையில் ஏறுவது உறுதியாகிவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளதாக கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதுகுறித்த உண்மை நிலை வெளியே வர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வரும் அதனை கண்டுகொள்ளவில்லை. அதிமுக ஆதரவளித்த வேளாண் திருத்த சட்டத்தால் விவசாயிகள், ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் மத்திய பாஜ அரசால் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் அதிமுக, பாஜவுக்கு எதிரான அலை வீசுகிறது.

Related Stories:

>