×

மாணவிகளுக்கு மேல்நிலைப்பள்ளி: பல்லாவரம் திமுக வேட்பாளர் இ.கருணாநிதி உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி, தினமும் பொதுமக்களை சந்தித்து, உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் பட்டாசு வெடித்து, மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நேற்று மாலை அனகாபுத்தூர் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடம் வேட்பாளர் பேசுகையில், அனகாபுத்தூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க, சென்னை பெருநகர குடிநீர் வாரியம் மூலமாக மெட்ரோ வாட்டர் திட்டத்தை கொண்டு வந்து, குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி நீர்த்தேக்க தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்துள்ளேன்.

இதேபோல் சட்டமன்றத்தில் பலமுறை போராடி, பம்மல்-அனகாபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ₹211 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. அனகாபுத்தூர் நகராட்சியில் மாணவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு மாணவிகளுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி அமைக்க சட்டமன்றத்தில் போராடியுள்ளேன். அதிமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். திமுக ஆட்சி அமைந்ததும் அனகாபுத்தூரில் மாணவிகளுக்கு தனியாக அரசு மேல்நிலை பள்ளியை கொண்டு வருவேன்’ என்றார். அவருடன் திமுக மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : HSS School for ,Pallavaram Thinam ,Fertile , DMK
× RELATED கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி நிதி