ஒருசிலர் மட்டுமே இந்தியாவை உருவாக்கவில்லை, இந்தியர் பலரின் வியர்வைத் துளிகளால் உருவானது: கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு..!

கன்னியாகுமரி: பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர்; திருவள்ளுவரின் சிலையும், விவேகானந்தரின் மண்டபமும் இந்தியர்களை கவர்ந்துள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக யாரும் கண்டுகொள்ளவில்லை, பாஜக அரசு தான் அதை செய்தது. தமிழகத்தில் சாலைப்பணிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக  - அதிமுக கூட்டணியின் கவனம் முழுவதும் நாட்டின் வளர்ச்சி மீதே உள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசு பாஜக அரசு. அனைவரும் இணைந்து அனைவரின் நம்பிக்கையை பெற்று அனைவரும் உயர்வோம் என்பதே எங்களின் சித்தாந்தம்.

சேவை செய்யும் நாங்கள் சாதி, மத பாகுபாடு பார்ப்பது இல்லை. புவிசார் பொருட்கள் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிப்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. கடற்கரை பிரதேசங்களை முன்னேற்ற 3 அடுக்கு திட்டத்தை பின்பற்றுகிறோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி மற்றும் நவீன கட்டமைப்பு மூலம் வாய்ப்புகள் உருவாக்குகிறோம். விவசாயிகளுக்கு அதிக கடனுதவி, சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. கடலோர பகுதிகளின் மேம்பாட்டுக்காக மத்திய பாஜக அரசு பணியாற்றி வருகிறது. மீனவர் நலனுக்காக ரூ.20 ஆயிரம் கோடியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த பாஜக அரசு முடிவு செய்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை வழங்கவும் மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

உள்ளூர் மக்களின் தனித்துவமான கலைப் படைப்புகள் சர்வதேச அளவில் புகழ் பெற சந்தை வாய்ப்புகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒருசிலர் மட்டுமே இந்தியாவை உருவாக்கவில்லை, இந்தியர் பலரின் வியர்வைத் துளிகளால் உருவானது.

Related Stories:

>