சினிமா துறையில் 50 ஆண்டு சேவையை பாராட்டி ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: மத்திய அரசு அறிவிப்பு: வாழ்த்துகள் குவிகின்றன

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு 2019ம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 3ம் தேதி அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெறும் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ரஜினிக்கு வாழ்த்துகளை குவித்துள்ளனர். ‘இந்திய சினிமா உலகின் தந்தை’ என்று பெருமையுடன் அழைக்கப்படுவர் ‘தாதா சாகேப் பால்கே.’ இவருடைய இயற்பெயர் துண்டிராஜ் சாகேப் பால்கே. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் பிறந்தவர். இவர்தான், இந்தியாவின் முதல் பேசும் படமான, ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கியவர். இந்திய சினிமா உலகில் நீண்ட நாள் சேவையாற்றி, உயரிய பங்களிப்பை வழங்கும் சினிமா கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் இவருடைய பெயரில், ‘தாதா சாகேப் பால்கே’ என்ற உயரிய விருது அளித்து கவரவிக்கப்படுகிறது. இந்திய சினிமா உலகின் மிகப்பெரிய விருதான இதை பெறுவது, ஒவ்வொரு சினிமா கலைஞனின் கனவாக இருந்து வருகிறது.

இந்நிலையில், 2019ம் ஆண்டுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் வெளியிட்டார்.இது தொடர்பாக ஜவடேகர் அளித்த பேட்டியில், ‘‘சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டுக்கான விருது, சினிமா துறையில் 50 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றிய நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுகிறது. ஆஷா போஸ்லே, மோகன்லால், பிஸ்வஜித் சட்டர்ஜி, சங்கர் மகாதேவன், சுபாஷ் காய் ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு, ரஜினியின் பெயரை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது. சினிமா உலகில் ரஜினி காந்த் சூரியனை போல் ஜொலிக்கிறார். தனது திறமை, கடின உழைப்பால் மக்களின் மனதில் அவர் தனக்ெகன ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். சினிமா உலகின் முடிசூடா மன்ன்னாக அவர் திகழ்கிறார். தேசிய சினிமா விருது வழங்கப்படும் விழா, மே 3ம் தேதி நடக்கிறது. அதில், ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படும்,’’ என்றார்.

அப்போது, ‘தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில் ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது ஏன்?’ என்று நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதை கேட்டு ஆத்திரமடைந்த ஜவடகேர், ‘‘இது சினிமா சம்பந்தப்பட்ட விருது. சினிமா உலகில் ரஜினி 50 ஆண்டுகளாக இருக்கிறார். அது சம்பந்தப்பட்ட தகுந்த கேள்வியை கேளுங்கள்,’’ என்று ஆவேசமாக பதிலளித்தார். ரஜினிக்கு தற்போது 51வது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக, இந்த விருதை தமிழகத்தை சேர்ந்த நடிகர் சிவாஜி கணேசன், இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த கே.விஸ்வநாத் போன்றவர்கள் பெற்றுள்ளனர். இந்த விருதை பெறும் ரஜினி காந்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், இந்திய சினிமா உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>