×

கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்காக போக்குவரத்தை தடை செய்யக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்தை தடை செய்யக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வக்கீல் எம்.ஞானசேகரன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள்  கூட்டங்களுக்கு செல்லும் இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் நடமாட்டமும் தடுக்கப்படுகிறது.கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம் ஆகியவற்றில் மக்கள் கூட தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக்கடை, திரையரங்கம், மால் ஆகியவற்றில் மக்கள் கூடி வருகின்றனர்.  அதேபோல பிரசார கூட்டங்களிலும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஒன்று கூடுகிறார்கள்.

பொதுமக்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்தப்படுவதால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, போக்குவரத்தை நிறுத்தாமல் பிரசாரங்களை மேற்கொள்ள அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முதல்வர், அமைச்சர் உள்ளிட்ட கட்சி தலைவர்களின் பிரசாரங்களின்போது போக்குவரத்தை தடை செய்யக்கூடாது. ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரும்போதுதான் உரிய போக்குவரத்து தடைகளை பின்பற்றவேண்டும். இதுதொடர்பாக டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு  தேர்தல் ஆணையம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags : ICC , Traffic should not be banned for party leaders' election campaign: ICC order
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...