×

இந்தியாவில் இருந்து இறக்குமதி தானாகவே அறிவித்தது தானாகவே விலகியது: பாகிஸ்தான் குழப்பம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்த பாகிஸ்தான், நேற்று அதை திடீரென கைவிட்டது. ‘ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால், இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கை இல்லை’ என்று கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் அறிவித்தது. கொரோனா ஊரடங்கின்போது பாகிஸ்தானில் மருந்து தட்டுப்பாடு நிலவியதால், கடந்த 2020, மே மாதம் மருந்து இறக்குமதிக்கான தடையை மட்டும் நீக்கியது.
தற்போது, பாகிஸ்தானில் பருத்தி, சர்க்கரை தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், இந்தியாவில் இருந்து இவை இறக்குமதி செய்யப்படும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சரான ஹமத் அசார் நேற்று முன்தினம் அறிவித்தார்.

பாகிஸ்தானின் பொருளாதார ஒத்துழைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இதை அவர் அறிவித்தார். ஆனால், இந்தியா இதற்கு எந்தவித கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரவை பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நேற்று கூடியது. இதில், இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதி செய்யும் முடிவை கைவிட முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சிரின் மஸாரி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் வரையில், இந்தியாவுடன் எந்த வர்த்தக உறவையும் பாகிஸ்தான் வைத்துக் கொள்ளாது,’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : India ,Pakistan , Import from India automatically declared withdrawal: Pakistan chaos
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!