×

சொன்னாரே? செஞ்சாரா? மக்களை எட்டிக்கூட பார்க்காத எம்எல்ஏ: கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், பெரிய தொகுதி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஆகும். இத்தொகுதியில், விவசாயமே மிக முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இதற்கு அடுத்து, செங்கல் உற்பத்தி மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்தொகுதிக்கு உட்பட்ட தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளால் ஏற்படும் மாசு, மணல் கொள்ளை, வன விலங்குகள் ஊடுருவல் ஆகியவை தீராத பிரச்னையாக உள்ளது. பெரிய தொழிற்சாலைகள் இல்லாதது, இத்தொகுதியின் குறைபாடு ஆகும். தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. நொய்யல் நதிக்கும், பவானி ஆற்றுக்கும் இடையே உருவாகி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலில் கலக்கும் கவுசிகா நதி, இந்த தொகுதியில்தான் உள்ளது. இயற்கை நீராதாரமான இந்த நதி பல்வேறு காரணங்களால் முற்றிலுமாக அழிவை சந்தித்துள்ளது. இந்த நதியை மீட்டெடுத்து, அவினாசி-அத்திக்கடவு திட்டத்தில் இணைக்க வேண்டுமென்பது இப்பகுதி விவசாயிகளின் தொடர் கோரிக்கை. ஆனால், இத்தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி, இதை கண்டுகொள்ளவில்லை.

இதுதவிர, இத்தொகுதியின் அங்கமான சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் கோவை மாவட்ட தொழில் முனைவோரின் நீண்டகால கனவாக இருந்து வருகிறது. மோட்டார், பம்புசெட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் குறுந்தொழில் மையங்கள் இத்தொகுதியில் அதிகம் இருப்பதால், குறுந்தொழில் முனைவோர்களை பாதுகாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், தொகுதி எம்எல்ஏ ஆறுக்குட்டி கண்டுகொள்ளவில்லை. ஆனைகட்டி அருகே மலைக்கிராமங்களான சேம்புக்கரை, தூமனூர் கிராமங்களில் சாலை வசதி இல்லை. இலவச பட்டா வழங்கப்படவில்லை. ஆனைகட்டி உண்டு உறைவிடப்பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. கோவையில் என்.எச். 67 மற்றும் என்.எச். 209ஐ இணைக்கும் வகையில் ரிங்ரோடு அமைத்து கொடுக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. வாகன பெருக்கம் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் இல்லை, சாலை விரிவாக்கம் இல்லை. பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படவில்லை.

கோவை மாநகராட்சியுடன், விாிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டடம் கட்ட, பிளான் அப்ரூவல் வழங்கப்படுவதில்லை. கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட இத்தொகுதியில் உள்ள கவுண்டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கால்வாய் பணி நடக்கவில்லை. மருதமலை பாலதண்டாயுதபாணி கோயில் முதல் அனுவாவி சுப்பிரமணிசுவாமி கோயில் வரை ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும், கணுவாய், ஆனைகட்டி பகுதிகளில் செக்டேம் அமைத்து சின்னத்தடாகம் வரை குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள  பழங்குடி மக்கள் இத்தொகுதியின் நிரந்தர வாக்காளர்கள். இவர்களது  வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய கடமை இத்தொகுதி எம்எல்ஏவுக்கு உள்ளது.  ஆனால், இவர், இப்பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லை. அதனால், இத்தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

‘நிறைய பணிகள் செய்துள்ளேன்’
ஆறுக்குட்டி எம்எல்ஏ கூறும்போது, ‘‘ரேஷன் பொருள் விநியோகம், குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் என எண்ணற்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொகுதி மக்களுக்கு செய்து கொடுத்துள்ளேன். இன்னொரு முறை வாய்ப்பு கொடுத்திருந்தால் மீதமுள்ள அனைத்து பணிகளையும் முடித்திருப்பேன். ஆனால், கட்சியில் எனக்கு மீண்டும் வாய்ப்பு தரவில்லை’’ என்றார். ‘நல்லவேளை பிழைத்துக்கொண்டார்’  கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டர் கூறும்போது, ‘‘தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நல்லவேளை ஆறுக்குட்டி எம்எல்ஏவுக்கு, அக்கட்சி சார்பில் மீண்டும் சீட் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால், அவர் மீண்டும் தொகுதிக்குள் வர முடியாத அளவுக்கு, மக்கள் விரட்டி அடித்திருப்பார்கள். நல்லவேளை பிழைத்துக்கொண்டார்’’ என்றார்.

Tags : MLA ,Countampalayam ,MLA Aarukutty , Did you say? Red? MLA who did not even look at the people: Countampalayam constituency MLA Aarukutty
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...