×

தாதா சாகேப் பால்கே விருது பெறும் ரஜினிக்கு தலைவர்கள் வாழ்த்து: கடிதம் மூலம் நன்றி தெரிவித்தார்

சென்னை: தாதா சாகேப் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, ஆளுனர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பல தலைமுறைகளிடையே பிரபலமானவர். அவரது வேலையில் இருக்கும் பன்முகத்தன்மைக்கு ஈடாக ஒருசிலர் மட்டுமே இருக்கின்றனர். வித்தியாசமான கதாபாத்திரங்கள், அன்பான ஆளுமை ஆகியவைதான் ரஜினிகாந்த். தலைவாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது என்பது அதிக மகிழ்ச்சி தரும் செய்தி. அவருக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில், ‘இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது. நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினியின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ‘திரைத்துறையில் தங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் தாதா சாகேப் பால்கே விருது. தாங்கள் இன்னும் பல விருதுகள் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தியில், ‘உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும், என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்து விட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100 சதவிகிதம் பொருத்தம்’ என்று தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ‘மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, என் அன்பு நண்பர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டு இருப்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். திரைத்துறையில் உங்கள் பங்களிப்புகள் மகத்தானவை, அளவிட முடியாதவை. என் மனமார்ந்த வாழ்த்துகள் நண்பா’ என்று கூறியுள்ளார். மேலும், ஆளு னர் பன்வாரி லால் புரோகித், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள நன்றி கடிதம்: இந்திய  திரையுலகின்‌ மிக உயரிய விருதான தாதா சாகேப்‌ பால்கே விருதை எனக்கு வழங்கிய மத்திய அரசுக்கும்‌, பிரதமர்‌ நரேந்திர மோடிக்கும்‌ என் மனமார்ந்த நன்றி. எனக்குள் இருந்த நடிப்புத்திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த பேருந்து ஓட்டுநரான நண்பன்‌ ராஜ்‌பகதூருக்கும்‌, வறுமையில்‌ வாடும்‌போதும்‌ என்னை நடிகனாக்க பல தியாகங்கள்‌ செய்த என்‌ அண்ணன்‌ சத்தியநாராயண ராவ்‌ கெய்க்வாட்‌டுக்கும்‌, என்னை திரையுலகிற்கு அறிமுகம்‌ செய்து ரஜினிகாந்த் ஆக உருவாக்கிய என் குருநாதர்‌ கே.பாலசந்தருக்கும்‌ மற்றும் திரையுலகினருக்கும், எனது ரசிகர்களுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்‌. என்னை வாழ்த்திய தமிழக முதல்வர்‌, துணை முதல்வர்‌, எதிர்க்கட்சி தலைவர் நண்பர் மு.௧.ஸ்டாலின்‌, நண்பர்‌ கமல்‌ஹாசன்‌ மற்றும் மத்திய, மாநில அரசியல்‌ தலைவர்களுக்கும்‌, என் நலம்‌விரும்பிகளுக்கும்‌ நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rajini , Leaders congratulate Rajini on receiving Dada Saheb Phalke Award: Thank you by letter
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...