×

தேர்தல் வாக்கு அரசியலுக்காக வன்னியர்களை ஏமாற்ற 10.5% உள்ஒதுக்கீடு ராமதாஸ், இபிஎஸ் போட்ட கபடநாடகம்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

* பண்ருட்டி தொகுதியின் செல்லப்பிள்ளையான நீங்கள், மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுவது எப்படி இருக்கிறது? பண்ருட்டி தொகுதிக்கு நான் செல்லப்பிள்ளை மாதிரி. ஏற்கனவே 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறேன். 70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் யாரும் செய்திராத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்து, அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளேன். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எல்லா பகுதிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன். நூலகங்கள், நிர்வாக அலுவலகங்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கி பஞ்சாயத்துக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவ, மாணவியர்கள், விடுதிகள் அந்தந்த இடங்களில் அமைத்து கொடுத்துள்ளேன்.

பண்ருட்டி எம்எல்ஏவாக வருவதற்கு முன்பு மின்சார வசதி சீராக இருக்காது. பல இடங்களில் சிம்லி விளக்குதான் எரிந்து ெகாண்டிருக்கும். ரூ.100 கோடி ஒதுக்கி 6 துணை மின் நிலையங்களை கொண்டு வந்தேன். பண்ருட்டி நகராட்சியில் மின்சார வசதி, சிமென்ட் சாலை, நகர பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், சுற்றுச்சுவர் என எண்ணிலடங்கா வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன். இதையெல்லாம் எங்கள் தொகுதி மக்கள் அனுபவித்து இருக்கிறார்கள். பழைய நெல்லிக்குப்பம் தொகுதியில் சில பகுதிகள் பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அவர்களிடம் நான் பண்ருட்டி எம்எல்ஏவாக இருக்கும்போது, என்ன செய்தேன் என்று கூறி, நான் எம்எல்ஏ ஆனால், மு.க.ஸ்டாலின் கூறிய நலத்திட்டங்களை கொண்டு வருவேன் என்று கூறி வருகிறேன். எங்கள் தொகுதியில் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு பட்டா வாங்கி கொடுத்து இருக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக கடலூர் மாவட்ட மக்கள்  பேரிடரில் பாதிக்கப்பட்டபோது, என் வீட்டை விற்று, 3 மாதங்களுக்கு அரிசி, பருப்பு, குடம், பாய், பெண்களுக்கு புடவைகள், ஆண்களுக்கான துணிமணிகள் என்று ரூ.2 கோடி செலவு செய்தேன்.

எம்எல்ஏ தான் வாழ்ந்த வீட்டை விற்று மக்கள் பணி செய்கிறாரே என்று என் மீது தொகுதி மக்களுக்கு மிகப்பெரிய மாறாத பற்று உள்ளது. 10 ஆண்டு காலம் எம்எல்ஏவாக இருக்கும்போது நான் என் சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுத்துக்கொள்ளவில்லை. அந்த சம்பளத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு வாட்ச் வாங்கி தருவது, சைக்கிள் வாங்கி தருவது, வகுப்பறைகளில் மின் விசிறி வாங்கி தந்தேன். நான் என் பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நன்கொடை புத்தகம் அடித்து யாரிடம் போய் கட்சி கூட்டம் நடத்துகிறேன், மாநாடு நடத்துகிறேன் நான் மட்டுமல்ல, என்னுடைய கட்சி தொண்டர்கள் கூட இப்படி கேட்டதில்லை. நான் எம்எல்ஏவாக இருக்கும் போது தொகுதி மக்கள் நிம்மதியாக இருந்தனர். இடையில் 10 ஆண்டுகாலத்தில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், மாமூல் என்று எவ்வளவு சீர்கேட்டு கிடக்கிறது என்று நான் சொல்லும் போது மக்கள் என்னை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர்.

* அதிமுக-பாஜ கூட்டணியை எப்படி பார்க்கிறீர்கள்?
அதிமுக-பாஜ கூட்டணி இல்லை இது. உண்மையில் பாஜ தான் அதிமுகவை இயக்குகிறது. இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக என்கிற கட்சி தனித்தன்மை முற்றிலுமாக போய் விடும். பாஜ தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டு அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொண்டர்களை தன்னகத்தே கொண்டு இங்கே காலூன்றும் வேலையில் ஈடுபடுகின்றனர். அதிமுகவை அழித்து விட்டு பாஜ இங்கு நிலைபெறுவதற்கான பணிகளை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இது தெரிந்தே தான் சம்பாதித்த பணத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடப்பாடி, ஓபிஎஸ், அமைச்சர்கள் துணை புரிகின்றனர் என்பதுதான் உண்மை நிலவரம்.

* அதிமுக கூட்டணி கட்சிகள் பணத்தை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுகின்றனரே?
பணம் மட்டுமே வெற்றியை தீர்மானிக்க முடியாது. படிப்பறிவு இல்லாத ஏழை, எளிய மக்களிடம் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் தருகிறோம். பாலில் சத்தியம் செய்யுங்கள் என்று கூறுகின்றனர். என் தொகுதியில் கூட முதல் ரவுண்ட் ரூ.500 கொடுத்து பாலில் சத்தியம் வாங்கியுள்ளனர். சாமி படத்தில் சத்தியம் வாங்குகின்றனர். தாலியை வைத்து சத்தியம் வாங்குகின்றனர். மக்களின் அறியாமையை பயன்படுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்து பல ரவுண்டுகளாக பணத்தை விநியோகம் செய்து வருகின்றனர். அதற்கு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த பணத்தை எடுத்து போய் கிராம வாரியாக விநியோகம் செய்யும் வேலையில் ஈடுபடுகின்றனர். அதையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி பெறும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவார்.

* திமுக வேட்பாளரை குறி வைத்தே பல இடங்களில் சோதனை நடக்கிறதே?
பாஜ தான் தமிழகத்தை ஆளுகிறது. அந்த கட்சி தனக்கு எதிராக உள்ள கட்சிகளை தேர்தல் பணிகளை செய்ய விடாமல் முடக்குவதற்காக அத்தனை யுக்திகளையும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். பணம் மக்களுக்கு கொடுக்கப்பட்டபோது எங்கேயும் பிடிபடவில்லை. தொழிலதிபர்கள் வீடுகளில் ரெய்டு சென்று சில இடங்களில் பணத்தை கைப்பற்றியுள்ளனர். இது திமுகவை மிரட்டுவதற்கு, கூட்டணி கட்சிகளை மிரட்டுவதற்கு வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை கையில் வைத்துக்கொண்டிருக்கிற அதிமுக-பாஜ செய்கிற வேலை தான். இதையும் தாண்டி எதிர்க்கட்சிகளை பழிவாங்குகின்றனர் என்கிற கோபம் மக்கள் மத்தியில் உள்ளது. ரெய்டு போன்ற உருட்டல், மிரட்டல்களுக்கு மக்கள் பணியமாட்டார்கள். இந்தியாவிலேயே தமிழக மக்கள் மாற்று சிந்தனை, மாற்று பார்வை கொண்டவர்களாக உள்ளனர்.

* திமுக கூட்டணி கட்சி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு மிக, மிக பிரகாசமாக இருக்கிறது. மக்களிடையே பேரெழுச்சி இருக்கிறது. அதோடு மட்டுமில்லாமல் இந்த அரசுக்கு எதிராக மிகப்பெரிய கோபம் இருக்கிறது. எடப்பாடி ஆட்சியில் இந்த 5 ஆண்டு காலத்தில் மக்களுக்காக எந்த ஒரு நல்ல காரியமும் நடைபெறவில்லை என்று நான் மக்களிடம் உரையாடும் போது, தெரிந்து கொண்டேன். மக்களே சொல்கிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நான் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

* தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
இதுவரை அதிமுகவினரை எங்கேயும் பணம் கொடுத்ததை பிடித்ததாகவோ தகவல் இல்லை. பண்ருட்டி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ஒருமையில் பேசியுள்ளார். இது குறித்து நான் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இப்போது வரை வழக்கு பதியவில்லை. இந்த நிலைமையில் தான் தேர்தல் ஆணையம் உள்ளது.

* காடுவெட்டி குருவை மருத்துவ கொலை செய்ததாக அவரது மகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாரே?
காடு வெட்டி குருவின் அம்மா, அவரது மனைவி, மகன், மகள், மைத்துனர் பத்திரிகையாளர்கள் மத்தியில் நீங்கள் சொன்னது போன்று பாமக நிறுவனர் ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அது இப்போது உண்மை என்று கொஞ்சம், கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது.

* பண்ருட்டி தொகுதியில் வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் வைத்திருக்கிறீர்களா?
பண்ருட்டி தொகுதியில் கொய்யா பழம், மாம்பழம், பலாப்பழம் 3 நாட்களில் அழுகி போய் விடும் என்பதால் அதை பாதுகாக்க குளிர்சாதன கிடங்குகள் அமைக்க வேண்டும். பண்ருட்டி தொகுதியில் கொய்யாப் பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஜாம், ஜூஸ் தயாரிக்கிற தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன். முந்திரி தொழிற்சாலை, பலாப்பழ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று கேட்டேன். திமுகவும் தனது தேர்தல் அறிக்கையில் அதை அறிவித்துள்ளது. என் கட்சியின் உயிர் மூச்சு கொள்கையான ‘தமிழர் வேலை தமிழருக்கே’ என்கிற முழக்கம் வைத்து 10 ஆண்டுகள் வரை போராடி வருகிறேன். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டக்குடியில் என்னை ஆதரித்து பிரசாரம் செய்யும்போது கூட தமிழகத்தில் காலியாக 3.50 லட்சம் அரசு பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை தமிழர்கள் ெகாண்டு மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது எனக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். மத்திய அரசு பணியில் 90 சதவீதம் பணியிடங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு தர வேண்டும் என்று ேபாராடி வருகிறேன். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கலைஞர் ஆட்சி காலத்தில் அறிவித்தார். இதை எந்த துறை அதிகாரிகளும் செய்வதில்லை. குறிப்பாக, சீருடை பணியாளர் தேர்வாணையம் அதை செய்வதில்லை. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், தமிழகத்தில் படித்தவர்கள் தமிழகத்தில் வேலை கேட்காமல், லண்டனில் போய் கேட்பார்களா என்று கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளார். இனி வருங்காலங்களில் 20 சதவீதம் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படும்.

* உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர் சமூக மக்கள் ஏமாற்றப்படுவதாக குற்றச்சாட்டு வருகிறதே?
தேர்தல் வாக்கு அரசியலுக்காக வன்னியர்களை ஏமாற்றுவதற்கு ராமதாஸ், ஓபிஎஸ், இபிஎஸ் அன்கோ போட்ட நாடகம். தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புகள் வெளியிடும் அரை மணி நேரத்திற்கு முன்பு சட்டமன்றத்தில் ஒரு மசோதாவை நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலை பெற்று இருப்பது என்பது முழுக்க, முழுக்க தேர்தலுக்கான நாடகம் என்பது தெரிகிறது. கலைஞர் கொடுத்த 20 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் வன்னியர் மக்கள் பலன் அடைந்தார்களே தவிர 10.5 சதவீதத்தால் வன்னியர்களுக்கு பலன் கிடைக்க போவதில்லை. குறிப்பாக வட தமிழகத்தில் வன்னியர்கள்தான் அதிகபட்சமாக வாழ்கின்றனர். அதனால், நான் சொன்ன மாவட்ட அளவிலான பதவிகளுக்கு நிரப்பப்படும் போது, வடதமிழகத்தில் வன்னியர்கள் 20 சதவீதத்தில் 15 சதவீதத்துக்கு மேலே அவர்கள் உள்ளே சென்று பட்டம் பெற்று வெளியே வருவார்கள். வேலை வாய்ப்புகளுக்கும் போவார்கள்.

ஆனால், இந்த 10.5 சதவீதம் என்று வைக்கப்பட்டால், ஏற்கனவே வன்னியர் பயன்பெற்ற 20 சதவீதம் உரிமை பறிபோகும். அதற்கு ஒரு உதாரணம். வடதமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாவிதரோ, வண்ணாரோ, குயவரோ, இருளர்களோ, கள்ளர் சமூகத்தில் இருக்கிற பிரமலை கள்ளர்கள் வடதமிழகத்தில் எங்குமே இல்லை. அவர்கள் வடதமிழகத்தில் பெயரளவில் 100 பேர், 200 பேர், 1000 பேர் தான் இருக்கின்றனர். 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வட தமிழகத்தில் அண்ணா பல்கலையில் 90 சதவீதம் வன்னியர் சமூகத்தினர் பெரும் பயன் அடைந்துள்ளனர். 10.5 சதவீதம் என்பதன் மூலம் வன்னியர் சமூகத்துக்கு பாதிப்பை தான் உண்டாக்கும். இந்த பாதிப்பை கூட மக்களுக்கு தெரிய விடாமல், இதை வைத்து வெற்றி பெற்றது போன்று ஒரு கொண்டாட்டமாக அவர்கள் தொண்டர்களை வைத்து ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் மத்தியில் இமேஜை உருவாக்கி அதன் மூலமாக நாடகம் நடித்தனர்.

அதை நாங்கள் அம்பலப்படுத்தியவுடனேயே தென்மாவட்டத்தில் முக்குலத்தோர்கள் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக அமைச்சர் உதயகுமார், துணை முதல்வர் ஓபிஎஸ் வரை மசோதா செல்லாது. 6 மாதத்துக்கு தான் நாங்கள் சட்ட மசோதாவில் சொல்லியிருக்கிறோம். நீங்கள் கவலைப்பட தேவையில்லை என அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். வன்னியர்கள் வாக்கை அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்த ராமதாஸ் கபட திட்டம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Tags : Vanni ,Ramadass ,EPS ,Tamil Nadu Right to Life Party ,Velmurugan , VANNIYAR political trick for the vote to 10.5% ulotukkitu Ramadoss, who EPS term hypocrisy: State rights leader Velmurugan
× RELATED சட்ட போராட்டம் நடத்தி...