மனுதாரரை தொந்தரவு செய்த விவகாரம்: இன்ஸ்பெக்டருக்கு 1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர் சரஸ்வதிநகர் பகுதியை சேர்ந்தவர் சாய்ராம். ஓய்வு பெற்ற வனச்சரகர். இவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013ம் ஆண்டு எனது தாயார் வசித்து வந்த வீட்டை பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை எழுந்தது. இதுதொடர்பான புகாரில் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ரவி, என்னை விசாரணைக்கு அழைத்தார். இது சிவில் விவகாரம் என தெரிந்தும் எனக்கு பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுத்தார். இந்நிலையில் போலீசார் உதவியுடன் வீட்டின் ஒரு பகுதி பூட்டு உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக நான் அளித்த புகாரை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து விட்டார். எனவே இன்ஸ்பெக்டர் ரவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சிவில் விவகாரத்தில் போலீசார் தலையிடக் கூடாது. இந்த விவகாரத்தில் உரிய  நீதிமன்றத்தை அணுகும்படி புகார் அளித்தவர்களிடம் போலீசார் தெரிவித்து இருக்க வேண்டும். அதை விடுத்து இன்ஸ்பெக்டர் புகாரை பெற்றுக்கொண்டு மனுதாரரை தொந்தரவு செய்தது மட்டுமல்லாமல் மரியாதை குறைவாகவும் நடத்தியது தெரியவருகிறது. எனவே, இன்ஸ்பெக்டர் ரவிக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு மனுதாரருக்கு 2 மாதத்துக்குள் வழங்கி விட்டு இன்ஸ்பெக்டரிடம் இருந்து வசூல் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>