×

வங்கதேசம் வாஷ் அவுட் நியூசிலாந்து தொடர் வெற்றி

ஆக்லாந்து: வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஆட்டத்தை வென்ற நியூசிலாந்து தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்து ஒயிட்வாஷ் ஆனது. தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. முதல் 2 ஆட்டங்களை வென்ற நியூசி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த 2 அணிகளும் மோதிய கடைசி டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடந்தது. தொடர் மழை காரணமாக ஆட்டம் தலா 10ஓவர்களாக குறைக்கப்பட்டன.

மகமுதுல்லா காயமடைந்ததால் லிட்டன்தாஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றார். முதலில் விளையாடிய நியூசி 10ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 141ரன் எடுத்தது. கப்தில் 44(19பந்து, 1பவுண்டரி, 5சிக்சர்), ஃபின் ஆலென் 71(29பந்து, 10பவுண்டரி, 3சிக்சர்) ரன் எடுத்தனர். வங்கதேசத்தின் தஸ்கின், இஸ்லாம், ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் 9.3ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 76ரன் எடுத்தது. அதனால் நியூசி 65ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசியின் ஆஸ்லே 4, சவுத்தீ 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசி டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், வங்கதேசத்தை மீண்டும் ஒயிட்வாஷ் செய்தது.

கொரோனாவுக்கு பிறகு தான் விளையாடிய எல்லாத் தொடர்களிலும் நியூசி கைப்பற்றியுள்ளது. முதலில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடர்களை தலா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0, டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வசப்படுத்தியது. தொடர்ந்து ஆஸிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் தனதாக்கியது. இந்த எல்லா தொடர்களும் நியூசி மண்ணில் மட்டுமே நடந்தன.

Tags : Bangladesh ,New Zealand , Bangladesh wash-out New Zealand series win
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...