×

தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கியது: 80% பேர் கோவிஷீல்ட் போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று துவங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து நேற்று முதல் 45 வயதுக்கும் மேற்ப்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் காலம் என்பதால் பயனாளிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது. எதிர் வரும் வாரங்களில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவருக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்துள்ளோம். பொது மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், முகக்கவசம் அணிவதையும், தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் நோய்த் தடுப்பு விதிகள் கடுமையாக்கப்படும்.

மேலும் வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும். இதன் மூலம் அதிக பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க முடியும். பொதுமக்களின் நலன் மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு இனி வாரத்தில் 7 நாள்களிலும் தடுப்பூசி மையங்களை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளோம். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனா தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைந்து கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது தவணைக்கான கால இடைவெளியை 8 வாரங்கள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட இணை சுகாதாரத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில்: கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணைக்கு இடையேயான கால அளவை 4 வாரங்களில் இருந்து 8 வாரங்கள் வரை அதிகரிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, அத்தகைய கால நீட்டிப்பை சூழலுக்கேற்ப செயல்படுத்துமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் அறுவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Tamil Nadu ,Gowishfield ,Health Department , Vaccination of people over 45 years of age has started in Tamil Nadu: 80% of them have been vaccinated: Health officials
× RELATED தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம்...