மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் அதிமுக ஊழல் அமைச்சர்கள் சிறைச்சாலைக்கு செல்வார்கள்: திருச்சுழி தொகுதியில் வைகோ பேச்சு

திருச்சுழி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் அதிமுக ஊழல் அமைச்சர்கள் சிறைச்சாலைக்குத்தான் செல்ல வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசை ஆதரித்து மதிமுக பொதுச்செயலார் வைகோ நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். ரெட்டியாபட்டியில் அவர் பேசியதாவது: தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு விரோதமான ஆட்சி நடைபெறுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்களித்தனர். டெல்லியில் 150 நாட்களாக போராடும் விவசாயிகளை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை. திமுகவினர் பெண்களை மதிப்பதில்லை என மோடி கூறுகிறார். ஆனால் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 2 பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பிரதமர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

அதிமுக ஊழல் நிறைந்த அரசு. அதனால் தான் அதிமுக அரசு மீது ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். மு.க.ஸ்டாலின் முதல்வரானதும் ஊழல் அமைச்சர்கள் அனைவரும் சிறைச்சாலைக்குத் தான் செல்ல வேண்டும்

திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம், மோட்டார் வாங்க மானியம் வழங்கப்படும். பனைதொழில் ஊக்குவிக்கப்படும். புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்படும். பயிர் காப்பீடு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தனிஒருவர் நிலத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கப்படும். ஏரி. குளங்களை தூர் வார ரூ10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். எனவே, திமுக கூட்டணியை மகத்தான வெற்றி பெறச்செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>