×

புதுச்சேரியில், பிரசாரத்தின்போது விபரீதம்: அமித்ஷா பேரணியில் சிலாப் உடைந்து 4 பேர் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில், அமித்ஷா பேரணியில் சிலாப் உடைந்து 4 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா காலை 10 மணிக்கு புதுச்சேரி வந்தார். அதன்பிறகு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டார். வாகன பேரணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன்பிறகு விமான நிலையம் திரும்பிய அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருக்கோவிலூர் சென்றார். முன்னதாக லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே உள்ள நேதாஜி சுபாஷ் சிலைக்கு மாலை அணிவித்து திறந்த ஜீப்பில் ஏறினார். அவரது பிரசார வாகனத்தை சூழ்ந்தபடி தொண்டர்கள் நின்றனர். இதனால் அவரது பிரசார வாகனம் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அமித்ஷா அங்கிருந்த மீடியா வாகனம் உள்ளிட்ட 2 வாகனங்களை முன்னே செல்லுமாறு இந்தியில் மைக்கில் சொன்னார். தொண்டர்களுக்கு இந்தி புரியாததால் குழப்பம் ஏற்பட்டது. அருகில் இருந்த பாஜக தலைவர் சாமிநாதன் மீடியா வாகனம் உள்ளிட்ட வாகனத்தை முன்னே செல்லுமாறு தமிழில் கூறினார். அந்த வாகனங்கள் முன்னேறியதால், தொண்டர்கள், நிர்வாகிகள் சாலையின் இருபுறமும் ஒதுங்கினர். அப்போது, கூட்ட நெரிசல் காரணமாக தொண்டர்கள் சாக்கடை கால்வாய் மீது ஏறி நின்றனர். இதனால் சிமெண்ட் சிலாப் பாரம் தாங்காமல் திடீரென உடைந்தது. பாலத்தில் நின்றிருந்த 3 பெண்கள், 70 வயது முதியவர் கால்வாய்க்குள் விழுந்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. முதியவர் கால் உடைந்தது. பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட ஆட்டோவை வரவழைத்து படுகாயம் அடைந்தவர்களை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு அனைவரும் வீடு திரும்பினர். இதற்கிடையில் பேரணி முடிவில் நேரமின்மை காரணமாக உரையாற்றாமல் சென்றார்.

குதிரை மறுத்ததால் பரபரப்பு
அமித்ஷா வருகையையொட்டி பாஜகவினர் குதிரை, பசுமாட்டை வரவழைத்து  நிறுத்தியிருந்தனர். அதனை பிரசார வாகனத்தின் முன்பு கொண்டு செல்ல  அழைத்தபோது, குதிரை வர மறுத்தது. அமித்ஷாவை பார்த்ததும் பின்பக்கமாக திரும்பி நின்றது. இந்த காட்சி, அங்கிருந்தவர்களை நெருடலில் ஆழ்த்தியது.

அமித்ஷா சந்திப்பை புறக்கணித்த ரங்கசாமி
புதுச்சேரிக்கு அமித்ஷா வருகையையொட்டி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால்  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கலந்து  கொள்ளவில்லை. மேலும், என்.ஆர்.காங்கிரஸ் கொடிகள் பேரணியில் பறக்கவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : amitsha rally , In Puducherry, piracarattinpotu mishap: Shah rally broken cilap 4 injured
× RELATED அமித்ஷா பேரணியில் சாலையோர வாய்க்கால்...