234 இடங்களிலும் திமுகதான் வெற்றிபெற போகிறது அதிமுக ஒரு இடத்தில் கூட தப்பித்தவறி வந்துவிடக் கூடாது: மயிலாப்பூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: 234 இடங்களிலும் திமுக தான் வெற்றிபெறப் போகிறது. அதிமுக ஒரு இடத்தில் கூட தப்பித்தவறி வந்து விடக்கூடாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு, தியாகராயநகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெ.கருணாநிதி, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலன் ஆகியோரை ஆதரித்து சென்னை மயிலாப்பூரில் நேற்று இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:  நான் என்ன சொல்கிறேன், எதை அறிக்கையாக விடுகிறேன் என்பதை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒருவர் உண்டு. அவர் யார் என்றால், முதல்வராக இருக்கும் பழனிசாமி தான். நான் என்ன சொன்னாலும், உடனே அதை அவர் அறிவித்து விடுவார். ஸ்டாலின் சொல்வதை அப்படியே காப்பி அடித்து கையில் ஜெராக்ஸ் எடுத்து வைத்து கொண்டு அறிவிக்கிறார்கள்.

 திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தேன. ஆனால், 10 வருடம் அதை பற்றி சிந்திக்கவில்லை. தேர்தல் வருகிறது என்றவுடன் நான் அறிவித்தவுடனே அதை அறிவித்து இருக்கிறார்கள். குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தேன். மறுநாள் ரூ.1500 என்று அறிவித்தார்கள். நாளைக்கு ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் வழங்க போறோம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆட்சிக்கு வரப்போவது இல்லை. சுட்டுப்போட்டாலும் வர போவது இல்லை. எதிர்க்கட்சியாக கூட வந்து உட்கார முடியாது என்று தெரியும். அதனால் தான் இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.

 பாஜகவை பொறுத்தவரை பார்லிமென்ட் தேர்தலில் நாம் வாஷ் அவுட் பண்ணி விட்டோம். சட்டமன்ற தேர்தலிலும் தான்.

அதிமுக ஒன்றுகூட தப்பித்தவறி வந்துவிடக் கூடாது. ஏன் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன் என்றால், நான் தேர்தல் தேதி அறிவித்தபோது, 200 இடங்களில் நம் அணி வெற்றிபெறும் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். இப்போது, இடைவிடாமல் 25 நாட்களாக பயணம் நடத்தி கொண்டு இருக்கிறேன். இந்த பயணத்தில் நான் பெற்றிருக்கும் அனுபவத்தில் உறுதியாக சொல்கிறேன். 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். இந்த ஆசை அற்ப ஆசையாக இல்லை. மக்களின் எழுச்சி. மக்கள் முடிவு பண்ணிவிட்டார்கள் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என்று. இதை மனதில் பதிய வைத்து கொள்ளுங்கள். தப்பித்தவறி ஜெயித்து விட்டால். அப்படி நடக்கப்போவது இல்லை. ஜெயித்து விட்டால் ஒருத்தர் ஜெயித்தால் கூட அதிமுக எம்எல்ஏவாக இருக்க மாட்டார். பிஜேபி எம்எல்ஏவாக மாறிவிடுவார். 38 இடங்களில் நாம் ஜெயித்தோம். ஒன்றே ஒன்று என்று ஓபிஎஸ் மகன் ஜெயித்தார்.

அவர் டெல்லியில் பார்லிமென்டில் உட்கார்ந்து கொண்டு அதிமுக எம்பியாக இல்லை, பிஜேபி எம்பியாக மாறிவிட்டார். நாம் நமது எம்பிக்கள், எம்எல்ஏக்கள் எல்லாம் தலைவர் படத்தை தான் லெட்டர்பேடில் போடுவோம். ஆனால், அவர் மோடியின் படத்தை போட்டு கொண்டு இருக்கிறார். அதனால், தான் ஒரு அதிமுக எம்எல்ஏ கூட வந்து விடக்கூடாது. அதை மனதில் நீங்கள் பதிய வைத்து கொள்ள வேண்டும். பழனிசாமி என்று நினைத்தாலே நமக்கு என்ன நினைப்பு வருகிறது. ஊர்ந்து போனவர். அடிமையாக இருந்தவர். இருந்து கொண்டிருப்பவர். கமிஷன், கரப்ஷன், கலெக்‌ஷன். பழனிசாமி என்று சொன்னாலே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய 13 பேரை சுட்டு கொன்றார்களே.. அந்த நினைப்பு தான் வருகிறது. சாத்தான்குளத்தில் அப்பா, மகனை காவல்நிலையத்தில் வைத்து கொன்றார்களே.. அது தான் நினைவுக்கு வருகிறது. இந்த சம்பவங்களுக்கு எல்லாம் முதல் வேலையாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் விட்டாலும் இந்த ஸ்டாலின் விட மாட்டான்.

 இரண்டு நாட்களுக்கு முன்னர் தாராபுரத்தில் பிரதமர் மோடி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியிருக்கிறார். தாராபுரத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பொள்ளாச்சி இருக்கிறது. நாளைக்கும் பிரதமர் வர போகிறார். என்ன பேச போகிறார் என்று தெரியவில்லை. பொள்ளாச்சியில் இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருப்பது பிரதமருக்கு தெரியாது. ஒரு பெண் எஸ்பிக்கு நடந்த கொடுமை. அதை செய்தது டிஜிபி. காவல்துறைக்கு தலைவர். பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர். திமுக ஆட்சி வரட்டும். ஆட்சி வந்ததற்கு அப்புறம்தான் நடவடிக்கை இருக்கிறது.  திராவிட மண் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு இந்தியை திணித்து, நீட்டை திணித்து, எப்படியாவது மதவெறியை திணிக்கலாம் என்று இருக்கிறார்கள். இது தமிழ் மண். பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்த மண். இந்த மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே பலிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>