×

பாஜகவினர் உள்ளூர் மக்களை ஒட்டு போட விடாமல் தடுக்கின்றனர் : ஆளுநரிடம் செல்போனில் புகார் அளித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா : வாக்குப்பதிவு நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் உள்ளூர் வாசிகளை வாக்களிக்கவிட வில்லை என குற்றம் சாட்டி வாக்குச் சாவடியில் இருந்தபடியே ஆளுநருக்கு மம்தா பானர்ஜி செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட வாக்குப்பதிவு 30 தொகுதிகளில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. நந்திகிராம் தொகுதியில் தமது வாக்குச் சாவடியில் சக்கர நாற்காலியில் சென்று முதல்வர் மம்தா பானர்ஜி வாக்களித்தார். அப்போது தனது வாக்குச் சாவடியில் உள்ள பாஜக கட்சியினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அங்குள்ள உள்ளூர் வாசிகளை வாக்களிக்க விடுவதில்லை என்று அங்கிருந்தபடியே செல்போன் மூலம் ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். தயவு செய்து ஆளுநர் இதனை கவனிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் வாக்களிக்க சென்ற முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக வாக்குச் சாவடிக்கு எதிரே வெளியே நின்று இருந்த சிலர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்புஏற்பட்டது . முழக்கம் எழுப்பிய அனைவரும் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. வாகனங்கள் மீது நடத்தப்பட்ட கல்வீச்சில் அவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. நந்திகிராம் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளில் பாஜக வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றிவிட்டதாகவும் வாக்குச் சாவடிகளையும் கைப்பற்றிவிட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு திரிணாமுல் மூத்த தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே மேற்கு வங்கத்தில் கமண்பூர் என்ற இடத்தில் செய்தியாளர்களின் வாகனங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேற்கு வங்கத்தில் ரஞ்சன்காங் என்ற இடத்தில் 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அங்கு பதுக்கி வைத்தவர்கள் யார் என்பது குறித்து துணை ராணுவ படையினர் விசாரித்து வருகின்றனர்.ஒரு வெடி குண்டு 15 கிலோவும் மற்றொரு வெடிகுண்டு 5 கிலோ எடையும் உள்ளது. 2 வெடிகுன்டுகளை பாதுகாப்பாக வெடிக்கச் செய்ய துணை ராணுவ படையினர் முயன்று வருகின்றனர்.


Tags : Mamata Banerjee ,Governor , Mamta Banerjee
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...