×

அசாம் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை: கடந்த 34 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிரடி.!!!

திஸ்பூர்: அசாம் வரலாற்றில் முதன்முறையாக ரூ.110 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடக்கிறது.  முதல் கட்டமாக கடந்த மார்ச் 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று 2ம் கட்டமாக 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி 67.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. 3ம் கட்டமாக 40 தொகுதிகளில் ஏப்ரல் 6ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கிடையே,மாநில  தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் கடே, தேர்தலில் ரொக்க பணம், மதுபானம், பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.110 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய சாதனைகள் அனைத்தும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், நிதின் கடே கூறுகையில், கடந்த 2016 அசாம் சட்டமன்ற தேர்தலின் போது ஒட்டுமொத்தமாகவே 20 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பறிமுதல் நடவடிக்கை இருந்தது. ஆனால் 2021 சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி (நேற்று)மார்ச் 31 வரையில் அசாமில் 110.83 கோடி மதிப்பிலானவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 33.44 கோடி ரூபாய் மதிப்பில் 16.61 லட்சம் லிட்டர் மதுபானம், 24.50 கோடி ரூபாய் ரொக்கம், 34.29 கோடி ரூபாய் மதிப்பில் போதை பொருட்கள், 3.68 கோடி ரூபாய் மதிப்பில் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அசாம் காவல்துறையினர், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுக்கள், கலால் மற்றும் பிற அமலாக்க மற்றும் ஒழுங்குமுறை முகமைகள் மூலம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறினார். மேலும் 14.91 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்கள், மிளகு, கசகசா விதைகள், பான் மசாலா போன்ற இலவசமாக வழங்கப்படவிருந்த பொருட்களையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாக நிதின் கடே கூறினார்.

மாநிலம் முழுவதும் கலால் விதிகளை மீறுதல் தொடர்பாக 5,234 வழக்குகள், தேர்தல் செலவு விதிகளை மீறியதாக 50 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த அசாம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி நிதின் கடே, இந்த வழக்குகளில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.

மாநிலம் முழுதும் 756 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த தேர்தலில் சுமார் 20 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பிலேயே பறிமுதல் நடவடிக்கைகள் இருந்ததாக குறிப்பிட்டார்.

Tags : Assam election ,Flying Force of Elections Action , New record in Assam election history: Rs 110 crore worth of goods seized in last 34 days; Election Flying Corps Action !!!
× RELATED நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப்...