தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும்!: சத்யபிரதா சாகு அறிவிப்பு..!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர், அரசு ஊழியர்களிடம் இருந்து மே 2ம் தேதி காலை 8 மணி வரை  தபால் வாக்குகள் பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  4.66 லட்சம் தபால் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் பெறப்பட்டுள்ளன எனவும் தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. வேட்பாளர்களும் தங்களுடைய இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் விறுவிறுப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடைபெறுவதால் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் இந்த முறை வாக்களிக்க வாக்குச்சாவடிகளுக்கு வரத் தேவையில்லை. அவர்கள் விருப்பத்தின் பேரில் தாபல் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 80 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 40 ஆயிரத்து 309 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்குகளை செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 4 லட்சத்து 35 ஆயிரத்து 300 மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் மாதம் 5ம் தேதி வரை தபால் வாக்குகள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயது நிரம்பிய 92,559 முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேருக்கு தபால் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா தொடர்பாக 143 புகார்கள் சி-விஜில் மூலம் பெறப்பட்டுள்ளதாக கூறிய சத்யபிரதா சாகு, தேர்தல் பறக்கும் படையினர் மூலம் அதிகபட்சமாக 42 கோடியே 78 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். வரும் 4ம் தேதி பிரச்சார நேரம் முடிவடைந்ததும் வெளியூர் நபர்கள் அந்த தொகுதியில் தங்குவதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவித்தார். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக 54 கோடியே 12 லட்சம் ரூபாய் சுகாதாரத்துறை சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் முகக்கவசம், கவச உடை மற்றும் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் வாங்குவது அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories:

>