×

சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தவர்களின் தட்டுகளுக்கு தலா ரூ.200 பணப்பட்டுவாடா!: வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்..!!

மதுரை: சோழன்வந்தான் தொகுதியில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் திமுகவினர் புகார் அளித்திருக்கின்றனர். தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினரும் ஆங்காங்கே வேட்பாளர்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர். இந்நிலையில், சோழவந்தானில் அதிமுக வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் அதிமுக வேட்பாளர் வரவேற்புக்கு காத்திருந்த பெண்களில் ஆரத்தி எடுத்தவர்களின் தட்டுகளுக்கு அதிமுகவினர் ரூபாய் 200 வீதம் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான வீடியோ காட்சி ஆதாரத்துடன் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.  மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம், நேற்று சோழன்வந்தான் பேரூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுகவினர் அவரை வரவேற்க பெண்களை ஆரத்தி தட்டுடன் ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் ஆரத்தி தட்டுடன் வரிசையில் நின்ற பெண்களுக்கு அதிமுகவினர் ஒரு தட்டுக்கு 200 வீதம் பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அதிமுகவினரின் பணப்பட்டுவாடா செய்த காட்சிகள் குறித்த வீடியோ ஆதாரங்களுடன் சோழவந்தான் தொகுதி திமுக தலைமை தேர்தல் முகவரும், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை செயலாளருமான கோகுல்நாத், சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் தேவாளிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அதில், தேர்தல் விதிமுறையை மீறி பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்திட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சோழவந்தான் தொகுதியில் தற்போது அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Soluvana Vol ,Officer , Cholavanthan, AIADMK candidate, Aarthi, Panapattuvada, video, DMK
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...