தஞ்சை மாணவர்களிடையே தீவிரமடையும் கொரோனா பரவல்!: புதிதாக ஆக்சிலியம் பள்ளியில் 8 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி..!!

தஞ்சை: தஞ்சையில் மேலும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 8 பேருக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், தஞ்சை மாவட்டத்திற்கு சென்னையோடு வணிக ரீதியாக அதிகளவில் தொடர்பு உள்ளதாலும், பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டதாலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 16 பள்ளிகளில் 230 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 203 மாணவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தஞ்சையில் உள்ள ஆக்சிலியம் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆக்சிலியம் பள்ளிக்கு விரைந்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். தஞ்சையில் மட்டும் இதுவரை 17 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>