×

தபால் வாக்கு அளிக்க முடியாத போலீசார் வரும் 3ம் தேதி மீண்டும் வாக்களிக்கலாம்: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் தபால் ஓட்டு போட முடியாத போலீசாருக்கு 3ம் தேதி மறுவாய்ப்பு அளிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி  பிரகாஷ் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டம் எழும்பூரில் உள்ள  மேல்நிலைப்பள்ளியில் போலீசார் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள், அலுவலர்களுக்கான தபால் வாக்கு அளிக்கும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி, ஆணையர் பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் தேர்தல் பணிகளில் 10 ஆயிரம் போலீசார் உள்ளனர். அவர்களில் 5 ஆயிரம் பேர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கான தபால் ஓட்டு பெறும் பணி நேற்று தொடங்கியது.

இதற்காக சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என இதுவரை சுமார் 5,500 பேர் தபால் வாக்கு போட்டுள்ளனர். இந்நிலையில்  நாளை மறுதினம் இவர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு முடிவடையும். மேலும் நேற்று தபால் ஓட்டு போட முடியாத போலீசாருக்கு வரும்  3ம் தேதி மறுவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னையில், மொத்தம் 5,800 போலீசார் தபால் ஓட்டு போட உள்ளனர். எழும்பூர் தொகுதியில் 688 போலீசார் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீசார் தபால் ஓட்டு போடும் பணிகளுக்கு 500 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அதிக வாக்குப்பதிவு, குறைந்த வாக்குப்பதிவு கொண்ட மையங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் 30 இடங்களில் முக்கியமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதேபோல் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் 577 என மொத்தம் 607 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக அறிவித்துள்ளோம். இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதுவரை 3 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதேபோல் தேர்தலின் போது போலீசாரின் நடவடிக்கைகளை கண்காணிக்க, போலீஸ் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரை நியமிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகள் ரகசியமாக நடைபெறும். தேர்தலுக்கு முந்தையநாள்தான் எந்த போலீசாருக்கு எந்த வாக்குச்சாவடி மையம் என்பது குறித்து தெரியப்படுத்தப்படும். கடந்த 2 நாட்களில் மட்டும் ₹20 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : District Election Officer , Police unable to cast postal vote may re-vote on 3rd: District Election Officer Info
× RELATED மேனகா காந்தி வேட்பு மனு தாக்கல்