×

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள் பே மூலம் அதிமுக பணம் விநியோகம்: 6,000 பேர் பட்டியல் சிக்கியது; புகார் அளிக்க சென்ற திமுகவினர் மீது தாக்குதல்

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், வாக்காளர்களுக்கு கூகுள்பே மூலம் அதிமுகவினர் பணம் விநியோகம் செய்து வருகின்றனர். பண பட்டுவாடாவுக்கு தயாராக இருந்த 6 ஆயிரம் பேர் பெயர் கொண்ட பட்டியல் சிக்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கடந்த இரு நாட்களாக பணம் விநியோகத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களுடன் பாதுகாப்புக்காக ஒரு போலீஸ்வாகனமும் செல்கிறது. இதனால் வேட்பாளர் தன்னுடன் பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் பாதுகாப்புடன் செல்வதால் அவர்களை யாரும் கேள்வி கேட்பதில்லை.

பறக்கும் படையினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கிராமங்களுக்கு பணத்தை எடுத்துச் சென்று ஊர் பெரியவர்களிடம் பணத்தை மொத்தமாக கொடுத்து வருகின்றனர். நகர் பகுதிகளில் நிர்வாகிகளிடம் பணம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது வீடு வீடாக குறிப்பாக அதிமுகவுக்கு விழும் வாக்குகள், நடுநிலை வாக்காளர்களை குறி வைத்து அவர்கள் பணம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்னர். சென்னையில் தி.நகர், ஆயிரம் விளக்கு, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகளில் அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இங்கெல்லாம் அதிமுகவினரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு தொகுதியில் அதிமுகவினரை பொதுமக்கள் நேற்று இரவு பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் பணம் விநியோகம் நடந்து வருகிறது. ஆனால் இந்த பண விநியோகத்தை தடுக்க வேண்டிய போலீசாரும், வருவாய் துறையினரும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கூகுள்பே மூலம் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம்  பட்டுவாடா செய்ய தயாரித்த பட்டியல் சிக்கியுள்ளது.

அதன் விவரம்: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதியும் போட்டியிடுகின்றனர். தோல்வி பயத்தில் அதிமுகவினர், வாக்காளர்களுக்கு பல்வேறு வழிகளில் பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை திமுகவினரும், பொதுமக்களும் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், மதுக்கரை பகுதியில் உள்ள ஆண்டாள் கோவில் டிரஸ்ட் சார்பில் தெலுங்குபாளையத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் காரில் வந்து வீடு வீடாக சென்று குங்குமம் மற்றும் விபூதி வழங்கினர். வீட்டில் உள்ளவர்களின் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு புகைப்படம் எடுத்தனர். மேலும், அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றும் கூகுள் பே மூலம் பணம் வரும் எனவும் கூறினர்.

புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரு பெண், இது பற்றி திமுகவினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, ஏராளமான திமுகவினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிமுகவினர் வந்த காரை சிறைபிடித்தனர். அதற்குள் 3 பேர் தப்பி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்களும், திமுகவினரும் அதிகளவில் திரண்டதால், அதிமுகவினர் வந்த கார், பேரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த காரை சோதனையிட்டபோது, வாக்காளர் பெயர் மற்றும் டெலிபோன் எண் கொண்ட பட்டியல் சிக்கியது. அதில் 6 ஆயிரம் பேரின் பட்டியல் இருந்தது. இதன்மூலம், அந்த வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணம் விநியோகம் செய்ய திட்டமிட்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், பேரூர் தாசில்தார் அலுவலத்தில் திமுகவினர் பெருமளவில் திரண்டனர். காருக்குள் என்ன இருக்கிறது? என்பதை காண்பிக்க வேண்டும் என முறையிட்டனர். ஆனால், அவர்களை அதிகாரிகள் உள்ளே விட மறுத்தனர். சிறிது நேரத்தில் அதிமுகவினரும் அங்கு திரண்டனர். அவர்கள், திமுகவினரிடம் வாக்குவாதம் செய்தனர். சிலர் கைகலப்பில் இறங்கினர். இதனால், அங்கு பரபரப்பாக காணப்பட்டது. இதற்கிடையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இரு தரப்பினரையும் விலக்கி, தனித்தனியாக அழைத்துச்சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக வக்கீல்கள் சிவசுரேஷ், மயில்வாகனன் ஆகியோர் பேரூர் தாசில்தாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்தனர். அதில், வாக்காளர் வீடு தேடி சென்று, டெலிபோன் எண் வாங்கியவர்கள் மற்றும் வாக்காளர்களை புகைப்படம் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூகுள் பே மூலம் பணம் விநியோகம் செய்ய உத்தவிட்டது யார்? என விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

Tags : Google Bay ,Koi Dontamur , AIADMK distributes money through Google Bay in Thondamuthur constituency of Coimbatore: 6,000 people stuck in list; Attack on DMK workers who went to lodge a complaint
× RELATED ஆவடி அருகே பரபரப்பு; லிப்ட்...