×

5 ஆண்டுகளாக மக்களை புறக்கணித்த அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர்: மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன்

* நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் நீங்கள் தினமும் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறீர்கள். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?
கொரோனா காலத்தில் தமிழக அரசால் பாதிக்கப்பட்ட மக்கள், அதிலிருந்து மீண்டு வரக்கூடிய அளவில் சரியான வேலைவாய்ப்புகள் இல்லை. சரியான வருமானமும் இல்லை. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அவர்களை கடுமையாக பாதித்துள்ளது. இதனால், மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துள்ள மக்கள் ஒரு மாற்று வேண்டும் என்று நினைக்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையை மக்கள் பெரிதும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழகத்துக்கு சரியான தலைவர் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மு.க.ஸ்டாலின்தான் தமிழகத்தின் அடையாளமாக இருக்க முடியும். மத்தியில் இருக்கிற பாஜவால் தமிழ்மொழிக்கும், அனைத்துவிதமான பண்பாட்டு கூறுகளுக்கும் ஆபத்து வருவதை அவர்கள் உணருகின்றனர். மத அடிப்படை வாதத்தை தமிழக மக்கள் வெறுக்கின்றனர். சிறுபான்மையின மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூக நல்லிணக்கத்தை விரும்புகின்றனர். அதற்கு மு.க.ஸ்டாலின்தான் சரியாக இருப்பார் என்று மக்களின் உணர்வாகவும், வெளிப்படையாகவும் இருப்பதை பார்க்கிறேன்.

* கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக எம்எல்ஏ தொகுதி பக்கம் வரவே இல்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே?
என்னுடைய தொகுதியில் இருக்கக் கூடிய அதிமுக வேட்பாளர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் தான் தொகுதிக்குள் இருக்கிற கிராமங்களுக்கு செல்கின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் யாரையும் சந்திப்பதில்லை. குறிப்பாக, அவர்களது உறவினர்கள் வீட்டில் ஒரு விசேஷம் என்றால் கூட அவர்கள் போவதில்லை. அவர்களை பார்க்கவே முடிவதில்லை. அவர்கள் வெற்றி பெற்ற பிறகு நன்றி தெரிவிக்க கூட தொகுதி பக்கம் வருவதில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் பிரச்னைகளுக்காக எம்எல்ஏவை தேடி போகும் போதெல்லாம் என்ன பிரச்னை என்று கேட்டு அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை.

இரட்டை இலை சின்னம், அதிமுக அடையாளம் மற்றும் அதனுடன் கூடுதலாக வாக்காளர்களுக்கு பணம் இருந்தால் போதும், நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்கிற இருமாப்பு அவர்களிடம் உள்ளது. மக்களை பார்க்க வேண்டும், சந்திக்க வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்கிற புரிதல் இல்லாமல் இருந்துள்ளனர். மக்கள் அவர்களை அந்நியமாக பார்க்கின்றனர். அவர்கள் தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவேதான் அதிமுக வேட்பாளரை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்று மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களை விரட்டி அடிக்கின்றனர். இதற்கு, அதிமுக வேட்பாளர்தான் காரணம்.

* திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
நான் வாக்கு சேகரிக்கும்போகும்போது கூட வேட்பாளர் வருகிறார் என்று தெரிந்து கிராமங்களில் உள்ள ஆண்கள், பெண்கள் என்னை சந்திக்க காத்துக்கிடக்கின்றனர். அவர்கள், தங்களது குறைகளை என்னிடம் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு கிராம மக்களும் தங்களது பிரச்னை முடிவுக்கு வர வேண்டும் என்று என்னிடம் கூறுகின்றனர். என்னை எதிர்த்து நிற்கின்ற அதிமுக வேட்பாளர் பல ஊர்களில் போக முடியாத நிலைதான் உள்ளது. மக்கள் ஊருக்குள்ளேயே வர வேண்டாம் என்றுதான் கூறுகின்றனர். மக்கள் அவரை நிராகரிக்கின்றனர். மக்களிடம் ஒரு எழுச்சி இருக்கிறதை நான் பார்க்கிறேன்.

* இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பணத்தை வைத்து வெற்றி பெற்று விட முடியுமா?
அதிமுகவின் ஒற்றை தாரக மந்திரமே பணம் பிரதானம். அதை கொடுத்து விட்டால் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று நினைக்கின்றனர். அதற்கேற்றாற் போல்தான் சிஸ்டத்தை மாற்றி வைத்துள்ளனர். மக்களுக்கு சேவை செய்கிற அளவுக்கு பொறுப்பாளர்கள் வேகமாக ஓடி வேலை செய்வது இல்லை. பணத்தை கொடுக்கலாம். வெற்றி ஈட்டலாம் என்று நினைக்கின்றனர். பணம் வெற்றியை தரும் என்பதை முழுமையாக நம்புகின்றனர். அதிமுக பணம் தரும் என்று எல்லோருக்கும் தெரிந்துள்ளது. வெளிப்படையாக இவ்வளவு தருவார்கள், அவ்வளவு தருவார்கள், யார் மூலம் வரும், எந்த தேதியில் வரும், எத்தனை நாட்களுக்கு முன் வரும், எப்படி கொடுப்பார்கள் என்பதை மக்களே சொல்கின்றனர்.

இந்த முறை பணத்தை வாங்கி கொண்டாலும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் எல்லோருக்கும் கெடுதலாக போய் விடும் என்று மக்கள் நினைக்கின்றனர். பணம் விநியோகிக்க போகிறார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. மக்கள் அதை வாங்கதான் போகிறார்கள். ஆனால், இந்த முறை மக்கள் பணத்துக்கு மதிப்பளிக்காமல் நாட்டுக்கும், தொகுதிக்கும், வீட்டுக்கும் பாதுகாப்பு, சந்ததிகளுக்கு பாதுகாப்பு என்கிற உணர்வுடன் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

* திமுக வேட்பாளர்களை குறித்து வைத்து ரெய்டு நடக்கிறதே?
வலுத்தவனுக்கு ஒரு நியாயம். இளைச்சவனுக்கு ஒரு நியாயம் என்பது 2,500 ஆண்டுகளாக இந்திய நாட்டில் இருக்க கூடிய நியதி. ஒரு சாராருக்கு சவுகரியமும், இன்னொரு சாராருக்கு அசவுகரியம் என்பதுதான் பாஜவின் மதவாத அடிப்படையே. எத்தனை விதமான முயற்சிகள் எடுத்தாலும் தான் நிலைத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. உண்மையில், ஓட்டுக்கு காசு கொடுப்பது அதிமுக-பாஜவும்தான். ஆனால், அவர்கள் எதிர் தரப்பு செய்கின்றனர் என்று ஒரு பிம்பத்தை கட்டமைக்க பார்க்கின்றனர். மோடி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு தங்களது வேண்டாதவர்களை மட்டுமின்றி, தன்னுடைய தோழமை கட்சியை கூட மிரட்ட வேண்டும். பணிய வைக்க வேண்டும் என்றால் உடனே ஒரு ரெய்டு நடத்துகின்றனர். அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆக இருந்தாலும், மத்திய அரசு நிறுவனங்கள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் வைத்து கொண்டு எதிரியாக இருந்தாலும், நண்பனாக இருந்தாலும், தங்களுக்கு தேவை என்றால் அதை வைத்துக்கொண்டு  மிரட்டுகின்றனர்.

* ஆளும் அரசுக்கு ஆதரவாக ஒரு சில அதிகாரிகள் செயல்படுகின்றனரே?
தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை. அது காவல்துறையாக இருந்தாலும், வருவாய்த்துறையாக இருந்தாலும் தேர்தலுக்கு முன்பு இடமாற்றம் நடக்கும். தேர்தல் இல்லாத காலத்தில் கூட மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தாலும், அதிமுக லாபியில் யார் சரியாக இருக்கிறார்களோ அவர்களை நியமிப்பார்கள். தேர்தல் நேரங்களில் தங்களுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளை தான் அவர்கள் இடம் மாற்றம் செய்து வைப்பார்கள். அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக தான் செயல்படுவார்கள். அதிமுக பண விநியோகம், சட்ட விரோத நடவடிக்கைகளை மூடி மறைத்து விட்டு, எதிர்க்கட்சிகள் முறையாக பணிகள் செய்தால் கூட, அவர்கள் செய்யும் வேலையில் குறை இருப்பதாக கூறி அவர்களை தொந்தரவு செய்கின்றனர். இதுதான் தற்போது இங்கு நடந்து கொண்டிருக்கிறது.

* தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாரபட்சமாக தான் இருக்கிறது. தபால் வாக்குகள் அளிக்க போன அரசு ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாக்குச்சீட்டை பெறுவதிலும், வாக்கு அளிப்பதிலும் சிரமம் இருந்ததாக கூறினார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டு திமுக கூட்டணிக்கு விழும் என்பதால்தான் இப்படி செய்துள்ளனர் என்ற சந்தேகம் உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் நடுநிலையாக இருப்பார்களா என்கிற ஐயம் உள்ளது. அதிமுக பண விநியோகம், சட்ட விரோத நடவடிக்கைகளை மூடி மறைத்து விட்டு, எதிர்க்கட்சிகள் முறையாக பணிகள் செய்தால் கூட, அவர்கள் செய்யும் வேலையில் குறை இருப்பதாக கூறி அவர்களை தொந்தரவு செய்கின்றனர்.


Tags : AIADMK ,People's Liberation Party ,Murugavel Rajan , AIADMK candidates who have been boycotting the people for 5 years are being chased away by the people: People's Liberation Party leader Murugavel Rajan
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...