×

நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

* இரட்டை ஓட்டு மோசடி தில்லுமுல்லு கட்சிகள் கிலி
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள கேரளாவில் ஏறக்குறைய 4.34 லட்சம் பேருக்கு இரட்டை வாக்குகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதலா கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையமோ, தாங்கள் நடத்திய ஆய்வில் 38 ஆயிரம் பேருக்கு மட்டுமே இரண்டு ஓட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வாக்குச்சாவடி அதிகாரிகள் தங்கள் தொகுதியில் இரட்டை வாக்குகள் உள்ளவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் என்பதால், அவர்களை கொண்டு ஆய்வு நடத்தியதாக கூறியது. ஆனால், சென்னிதலாவோ, `தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு நடத்தவில்லை. கேரளாவில் ஏறக்குறைய 4 லட்சத்து 34 ஆயிரம் பேருக்கு இரண்டு வாக்குகள் உள்ளது. விரைவில் இந்த பட்டியலை இணையத்தில் வெளியிடுவேன்,’ என்று கூறியுள்ளார். இதனால், தில்லுமுல்லுவில் ஈடுபட்ட எதிர்தரப்புகள் கிலியில் உள்ளன.

* 244-ஏ கை கொடுக்குமா?
அசாமில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 244 ஏ-வை கடைசி அஸ்திரமாக காங்கிரஸ் பிரயோகித்துள்ளது. ‘இதனால் பெரும் திருப்பம் ஏற்படும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது காங்கிரஸ் கூட்டணி கட்சிகள். கடந்த செவ்வாய் கிழமை ராகுல் காந்தி வீடியோ செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘அசாம் மக்களின் கலாசாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் பாஜ தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக, மலைவாழ் பழங்குடியின மக்களின் பாதுகாவலாக இருக்கும் 244-ஏ.வை ரத்து செய்ய முயற்சிக்கிறது. மண்ணின் மைந்தர்களைப் பாதுகாக்கும் 244 ஏ சட்டப் பிரிவை காங்கிரஸ் அரசு பாதுகாக்கும். அதன் சகல உட்பிரிவுகளும் முழுமையாக அமல்படுத்தப்படும்,’ என்று அறிவித்துள்ளார். அசாம் எப்போதும் காங்கிரஸ் மாநிலமாகவே இருந்துள்ளது. அதன் காரணகர்த்தாக்களாக இருக்கும் மலைவாழ், பழங்குடியின மக்கள் மனதில் இந்த புதிய வாக்குறுதி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* முதல்வர் பதவிக்காக முட்டும் தலைவர்கள்
மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடந்தபோதே, இம்மாநிலத்தில் பாஜ.தான் வெற்றி பெறும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி விட்டார். 200 இடங்களுக்கு மேல் பாஜ வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியிட்டுள்ளார். அமித்ஷா சொன்னால் சொன்ன மாதிரி நடக்கும் என பாஜ.வில் ஒரு நம்பிக்கை. இதனால், மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்து விட்ட கனவில் இப்போதே, அம்மாநில பாஜ தலைவர்கள் மிதக்கின்றனர். பலர் இப்போதே முதல்வர் பதவியை பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி விட்டனர். மேற்கு வங்க பாஜ தலைவரான திலீப் கோஷ், மக்களவை எம்பி.யாக இருக்கிறார். தேர்தலுக்கு பிறகுதான் முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று பாஜ. தலைமை ஏற்கனவே அறிவித்து விட்டது. இதில், எம்பி.யாக உள்ள தீலிப் கோஷுக்கு வாய்ப்பில்லை என தகவல் பரவ, அவர் டென்ஷனாகி இருக்கிறார், ‘எம்எல்ஏ.தான் முதல்வராக வேண்டுமா? அதற்கு வெளியில் இருந்தும் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படலாம்’ என்று நேற்று முன்தினம் அவர் கூறியதின் மூலம், முதல்வர் பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

* மோடியின் பிரசாரத்தால் அப்செட்டான ரங்கசாமி
புதுச்சேரியில் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 2வது முறையாக பிரசாரத்துக்கு வந்தார். கடந்த கூட்டத்தில் பங்கேற்காத என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, இந்த கூட்டத்தில் தன்னை முதல்வர் வேட்பாளராக மோடி அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் 14 வேட்பாளர்களுடன் வந்தார். ஆனால், தனது உரையில் இது பற்றி மோடி வாய் திறக்கவில்லை. மாறாக, நாராயணசாமியை விமர்சித்து விட்டு ஹெலிகாப்டரில் டெல்லி பறந்து விட்டார். இதனால், முதல்வர் வேட்பாளர் கனவுடன் சென்ற ரங்கசாமிக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாறாக, ரங்கசாமியின் மருமகனான நமச்சிவாயத்துடன் மோடி அடிக்கடி பேசியபடியே இருந்தார். இதனிடையே, 2ம் கட்ட பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று புதுச்சேரி வருகிறார். அவராவது ரங்கசாமியின் ஆசையை நிறைவேற்றுவாரா? என்ற என்ஆர் காங்கிரசின் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New; Kerala; West Bengal; Assam
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி