காவல்துறையில் 33 ஆண்டுகள் பணி சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சுனில்குமார் ஓய்வுபெற்றார்: டிஜிபி திரிபாதி நினைவுபரிசு வழங்கினார்

சென்னை: சிவில் சப்ளை சிஐடி டிஜிபியாக பணியாற்றி வந்த சுனில் குமார் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு டிஜிபி திரிபாதி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார். எம்.ஏ., எல்எல்பி படித்த இவர், கடந்த 1988ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தார். வேலூரில் தனது முதல் பணியை கூடுதல் எஸ்பியாக சேர்ந்த சுனில்குமார், படிப்படியாக பதவி உயர்வு பெற்று காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றினார். தற்போது, சிவில் சப்ளை சிஐடியில் டிஜிபியாக இருந்த சுனில்குமார் நேற்று ஓய்வு பெற்றார்.

தமிழக காவல்துறை சார்பில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை பிரிவுபசார நிகழ்ச்சி நடந்தது. இதில், டிஜிபி சுனில் குமார் தனது மனைவி பூனம் சுனில் மற்றும் குடும்பத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு முன்னதாக ராஜரத்தினம் மைதானத்திற்கு வந்த டிஜிபி சுனில்குமாரை சாரட் வண்டியில் அமரவைத்து நிகழ்ச்சி மேடைக்கு அழைத்து வந்தனர். அப்போது டிஜிபி திரிபாதி தனது மனைவி அனுஜாவுடன் டிஜிபி சுனில்குமாருக்கு மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் திறந்த ஜீப்பில் போலீசார் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து டிஜிபி திரிபாதி காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஜிபி சுனில்குமாருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் டிஜிபிகள் சைலேந்திரபாபு, பிரதீப் வி. பிலீப், தமிழ்செல்வன், ஷகில் அக்தர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>