அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன்ஜாமீன் அனைத்து மிரட்டல் வழக்குகளிலும் ஆட்சேபமற்ற நிலை பின்பற்றப்படுமா? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறேன். நாலாட்டின்புதூர் ஊத்துப்பட்டி விலக்கு அருகே பறக்கும் படையினர் கடந்த மார்ச் 12ல் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது நான், பறக்கும் படையினரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும், ‘‘10 நாட்களுக்கு மட்டும் தான் நீ ஆடுவே. அதுக்கு பிறகு உன்னை என்ன பண்றேன் பாரு’’ என்று ஒருமையில் பேசியதாவும், பறக்கும் படையினரை மிரட்டியதாகவும் பறக்கும் படை-2 ன் குழுத்தலைவர் மாரிமுத்து புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் காரணங்களுக்காக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பில் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நீதிபதி, ‘‘அனைத்து மிரட்டல் (506(1)) வழக்குகளிலும் அரசு இந்த நிலையை பின்பற்றுமா’’ என கேள்வி எழுப்பினார். பின்னர், தேர்தல் காலம் என்பதால் நிபந்தனை விதிக்க விரும்பவில்லை எனக் கூறி, அமைச்சருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories:

>