×

நீதிபதி, எஸ்.ஐ.டியிடம் இளம்பெண் வாக்குமூலம் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பு: ரமேஷ் ஜார்கிஹோளி விரைவில் கைதாகிறார்?

பெங்களூரு: ஆபாச சிடி வழக்கில் இளம்பெண் எஸ்ஐடி மற்றும் நீதிபதி முன்பு இரண்டாவது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். இவரது மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகு முன்னாள் அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  கர்நாடக முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கி ஹோளி, ஆபாச வீடியோ வழக்கு குறித்து எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கில் 7 பேர் கைதாகியுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட இளம் பெண்ணையும் எஸ்.ஐ.டி கைது செய்ய தேடியது. ஆனால் அவர் முன்கூட்டியே நீதிமன்றத்தில் உதவியை நாடிவிட்டார். நீதிபதி முன்பு 164 பிரிவின் கீழ் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக கூறிய அவர், ரமேஷ் ஜார்கிஹோளி  மீது பலாத்கார புகாரும் அளித்தார்.

ஒருபுறம் ரமேஷ் ஜார்கி ஹோளிக்கு எதிராக வழக்கு பதிவானது. மற்றொரு புறம் இளம் பெண் போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு ஆஜராகினார்.  அப்போது பல்வேறு ரகசிய தகவல்களை இளம் பெண் நீதிபதியிடம் கூறியிருக்கிறார். மேலும் அது தொடர்பான சில ஆதாரங்களையும் நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். அதை ஆவணங்களாக பதிவு செய்து கொண்ட நீதிபதி, இளம் பெண்ணிற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும். எஸ்.ஐ.டி விசாரணை முடிந்ததும் அவரை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டார். அதே நேரம் எஸ்.ஐ.டி தரப்பில் இளம் பெண்ணிடம் விசாரணை நடத்த நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நீதிபதி உத்தரவின் பேரில் இளம் பெண் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஆஜராகினார். அப்போது எஸ்.ஐ.டியிடம் பல்வேறு ஆவணங்களை அவர் சமர்ப்பித்துள்ளார்.

குறிப்பாக எப்படி பழக்கம் ஏற்பட்டது. செல்போன் நம்பரை மாற்றி கொண்டது எப்போது?. தனிமையில் சந்தித்து எப்போது?. பலாத்காரம், பாலியல் தொல்லைக்கு ஆளானது எப்படி? என்பது குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவை அனைத்திலும் ரமேஷ் ஜார்கி ஹோளி தனக்கு வேலை வாங்கி தருவதாக பலாத்காரம் செய்ததாகத்தான் கூறியிருக்கிறார். மேலும் இதற்கான ஆடியோ, வீடியோவையும் எஸ்.ஐ.டியிடம் 10ம்அவர் ஒப்படைத்துள்ளார். இருப்பினும் முக்கிய ஆதாரம் கிடைக்கவேண்டுமென்று எஸ்.ஐ.டி எதிர்பார்த்தனர். அதற்கு இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தவேண்டுமென்று திட்டமிட்டனர்.

இதற்காக இளம் பெண்ணிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று நேற்று காலை இளம் பெண் எஸ்.ஐ.டி முன்பு ஆஜரானதும், நேராக போலீசார் அவரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு கொரோனா பரிசோதனை முதலில் எடுக்கப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து 5 விதமான மருத்துவ பரிசோதனை செய்ய எஸ்.ஐ.டி மருத்துவர்களிடம் கேட்டு கொண்டது. அதாவது முதலில் சாதாரண மருத்து பரிசோதனை செய்யவேண்டுமென்றும், பின்னர் பலாத்காரம், பாலியல் தொல்லை தொடர்பான மருத்துவ பரிசோதனை,  இளம் பெண்ணின் தலைமுடி, நகம், சிறுநீர், இரத்தம் பரிசோதனை செய்யவேண்டும். இறுதியாக இளம் பெண் பூரண மன நலத்துடன் உள்ளாரா. பாலியல் தொல்லைக்கு பின்னர் அவரது நடவடிக்கை எப்படியுள்ளது என 5 விதமான மருத்துவ பரிசோதனைக்கு செய்து அறிக்கை அளிக்கும்படி கேட்டு கொண்டனர். இதை ஏற்ற பவுரிங் மருத்துவமனை மருத்துவர்கள் சுமார் 4 மணி நேரம் அவருக்கு மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினர்.

 மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இளம் பெண் எஸ்.ஐ.டி போலீசாரின் விசாரணைக்காக ஆடுகோடியுள்ள டெக்னிக்கல் விங் செல்லிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர்களிடம் ரமேஷ் ஜார்கி ஹோளி தன்னிடம் எப்படி நடந்து கொண்டார். நேரில் சந்தித்தபோது என்னென்ன செய்தார் என்பதை எடுத்து கூறியுள்ளார். குறிப்பாக வேலை வாங்கி தருவதாக கூறி, இரண்டு, மூன்று முறை பலாத்காரம் செய்துவிட்டு, வேலை கிடையாது என்று கூறிவிட்டார். மாறாக பணம் வேண்டுமென்றால் வாங்கி கொள் என்று கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்து, சந்திப்பதை நிறுத்தினால், மீண்டும் தனிமையில் சந்திப்பதற்கு வரும்படி அழைத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கில், அவர் வைத்திருந்த உல்லாச வீடியோவை சிடியாக எடுத்து, என்னுடைய பாதுகாப்புக்கு வைத்து கொண்டேன்.

என்னுடைய நிலைக்கு நியாயம் கேட்க முயற்சித்தேன். இதற்காக சரவணின் உதவியை நாடினேன். அவர் ஆதாரம் வேண்டுமென்றார். அவர் நரேஷை அறிமுகம் செய்து வைத்தார். அவர் உதவி செய்ததாக கூறினார். முன்னதாக ஆதாரத்தை கேட்டனர். என்னிடம் இருந்த சி.டியை கொடுத்தேன். மீதமுள்ள சி.டிகளை என்னுடைய ஆர்.டிநகர் பி.ஜியில் வைத்திருந்தேன். நரேசும் சி.டியை வெளியிடவில்லை. நானும் வெளியிடவில்லை. ஆனால் எப்படி அந்த சி.டி வெளியானது என்று தெரியவில்லை. ஏற்கனவே ரமேஷ் ஜார்கி ஹோளி இந்த வீடியோவை காண்பித்து என்னை மிரட்டி, உல்லாசத்திற்கு அழைத்தார். அவர்தான் இந்த சி.டியை வெளியிட்டிருக்ககூடும் என்று சந்தேகிப்பதாக எஸ்.ஐ.டி விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இரண்டாவது நாளான நேற்று இதே வாக்குமூலத்தை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. அதை பதிவு செய்து கொண்ட போலீசார், இளம் பெண் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் மேலும் இரண்டு நாட்கள் அவர் எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இளம் பெண்ணின் அடுத்தடுத்த நடவடிக்கை மற்றும் வாக்குமூலத்தால் ஆட்டம் கண்டுள்ள ரமேஷ் ஜார்கி ஹோளிக்கு கைது பயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல உள்துறை அமைச்சரும் மீடியாக்களில் இரட்டை பதில் அளித்துள்ளார். அதாவது எஸ்.ஐ.டி அதனுடைய விசாரணையை நடத்தி வருகிறது. அதில் யாரும் தலையிட முடியாது. முழு சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரமேஷ் ஜார்கி ஹோளி கைதாவாரா? அல்லது இல்லையா என்பது எஸ்.ஐ.டியின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. எஸ்.ஐ.டி அதிகாரிகள் அதை பார்த்து கொள்வார்கள் என்று கூறிவிட்டார். இதனால் எஸ்.ஐ.டி விசாரணையின் முடிவிற்காக பாஜ மற்றும் காங்கிரசை சேர்ந்த முக்கிய தலைவர்கள் காத்திருக்கின்றனர். விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீடியோ எடுத்தது யார்?
ரமேஷ் ஜார்கி ஹோளி ஆபாச சி.டி வழக்கில் தொடர்புடைய இளம் பெண்ணிடம் இரண்டாவது நாளாக நேற்று நடந்த விசாரணையின் போது 84 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது அவர் 300 பக்கம் கொண்ட வாட்ஸ் ஆப் சேட்டிங் விவரங்களை கொடுத்துள்ளார். இதையடுத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அதில் செல்போன் சார்ஜர் மற்றும் பேக்கில் கேமராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதை சரவணனிடம் கொடுத்துள்ளார். ரமேஷ் ஜார்கிஹோளி மோசடி செய்ததால், போலீஸ் மூலம் நியாயம் கேட்க முயற்சித்தார்.

ஆனால் போலீசார் முறையாக பதில் அளிக்கவில்லை என்றதும், இந்த வீடியோவை மீடியாக்களில் வெளியாகியதாக தெரிவித்துள்ளார். ஆனால் யார் வெளியிட்டனர் என்பது தெரியவில்லை என்று இளம் பெண் தெரிவித்துள்ளார். இவ்வாறு 84 கேள்விகளுக்கு இளம் பெண் முறையாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதை பதிவு செய்து கொண்டுள்ள போலீசார், அடுத்த கட்டமாக ரமேஷ் ஜார்கி ஹோளியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முகமது நலபாட் நண்பர் காரில் ஆடுகோடிக்கு வந்து சென்ற இளம்பெண்
இளைஞர் காங்கிரசை சேர்ந்த முகமது நலபாட் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு எதிராக சமீபத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். இந்நிலையில் ஆபாச சி.டி வழக்கில் தொடர்புடைய இளம் பெண் ஆடுகோடி டெக்னிக்கல் விங் மையத்தில் இருந்து வெளியே செல்லும்போது, முகமது நலபார்ட் நண்பரின் வாகனத்தில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.  எஸ்.ஐ.டி அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்பிதான், இளம் பெண் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் நீதிபதியின் அனுமதியின் பேரில்தான் அவர் எஸ்.ஐ.டிக்கு ஆஜராகினார்.

முன்னதாக போலீசாரின் கவனத்தை திசை திருப்பியபோது, இளம் பெண் யார் உதவியுடன் வந்துள்ளார் என்பதை கண்டறிய அவர் பயணம் செய்த கார் விவரங்களை சேகரித்தனர். குறிப்பாக கார் நம்பரை வைத்து அது யாருடையது என்று பரிசீலனை செய்தனர். அதில் இளம் பெண் வந்து சென்ற கார் இளைஞர் காங்கிரசை சேர்ந்த முகமது நலபாடின் நெருங்கிய நண்பரான நபி என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. 2018ம் ஆண்டு அந்த கார் வாங்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் எஸ்.ஐ.டிக்கு முகமது நலபார்டின் நண்பருக்கும், இளம் பெண்ணிற்கும் என்ன பழக்க வழக்கம் என்பது குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர்.



Tags : SIT ,Ramesh Jharkiholi , Woman's confession to SIT, SIT await medical report: Ramesh Jharkiholi to be arrested soon?
× RELATED பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு...