சிபிஐ , அமலாக்கத்துறை மூலம் அரசியல் தலைவர்களை மத்திய பாஜக அரசு குறிவைக்கிறது: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மம்தா கடிதம்.!!!

கொல்கத்தா: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். தமிழகம், புதுச்சேரி,கேரள ஆகிய மாநிலங்களில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஓரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அசாம், மேற்கு வங்கத்தில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கிடையே, மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் மாநில, மத்திய அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக  அல்லாத தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் மம்தா பானர்ஜி குறிப்பிடுகையில், பாரதிய ஜனதா அரசால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்க பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சனைகளை உருவாக்குகிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில ஆளுநர்கள் பாஜகவின் தொண்டர்களை போல் செயல்படுகின்றனர்.

சிபிஐ , அமலாக்கத்துறை மூலம் திமுக, திரிணாமுல் தலைவர்களை மத்திய பாஜக அரசு குறிவைக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசு வருமானவரி சோதனைகளை நடத்துகிறது. பிறகட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கும் சிபிஐ அமலாக்கத்துறை பாஜக தலைவர்களை கண்டுகொள்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 5 மாநில தேர்தல் நேரத்தில் மம்தா பல்வேறு மாநில தலைவர்களுக்கு கடிம் எழுதியுள்ளது பாஜக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>