×

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற சென்னை முழுவதும் ரூ.3.18 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

சென்னை: சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு சென்ற ரூ.3.18 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடை பெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பொதுமக்கள் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 அப்படி பணம் எடுத்து சென்றால் பணத்திற்கான உரிய ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ேநற்று இரவு நடத்தி அதிரடி வாகன சோதனையில், மயிலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஊழியர் சரவணன் எந்தவித ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 அதேபோல், தி.நகரில் இரண்டு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிண்டியில் உள்ள தனியார் வங்கியில் இருந்து பாண்டிபஜார் வங்கி கிளைக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14.59 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தி.நகரில் இருந்து மேற்கு மாம்பலத்தில் உள்ள தனியார் வங்கிக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.14 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், எம்.ஜி.ஆர்.நகரில் நடத்திய சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி காயத்ரி என்பவர் கொண்டு சென்ற ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சைதாப்பேட்டை பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் வங்கிக்கு சொந்தமான ரூ.1 கோடியே 3 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மயிலாப்பூர் பகுதியில் வங்கி ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப கொண்டு சென்ற ரூ.29 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு வங்கி அதிகாரிகள் உரிய ஆவணங்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் காட்டியதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.29 லட்சம் பணம் விடுவிக்கப்பட்டது.

கொடுங்கையூரில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கமல்ஜெயின் என்பவர்  கொண்டு சென்ற ரூ.1.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபகுதியில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கார்த்திகேயன் என்பவர் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வடபழனியில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கிகளுக்கு பணம் கொண்டு  சென்ற வாகனத்தில் இருந்து ரூ.90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை முழுவதும் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.3.18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Election Flying Squad , Rs 3.18 crore seized across Chennai without proper documents: Election Flying Squad operation
× RELATED புதுக்கோட்டையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.60 ஆயிரம் பறிமுதல்