தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி உத்தரவு!!

மதுரை : தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு முன்ஜாமீன் அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

மார்ச் 12ம் தேதி காலை 10.30 மணி அளவில் கோவில்பட்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே கோவில்பட்டி சட்டமன்ற பறக்கும்படை குழு தலைவர் மாரிமுத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அவர் அவ்வழியாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தையும், அவருடன் வந்தவர்களின் வாகனங்களையும் சோதனைக்காக நிறுத்தியுள்ளார். அப்போது வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அமைச்சர் கடம்பூர் ராஜு, பறக்கும் படைகுழு தலைவர் மாரிமுத்துவையும் அவருடன் பணியிலிருந்தவர்களையும் பணி செய்ய விடாமல், ஒருமையில் பேசி மிரட்டியதாகவும், தேர்தல் பணி விபரத்தை தெரிவித்த பின்னரும் மிரட்டியதாகவும் கூறி புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடம்பூர் ராஜூ மீது தூத்துக்குடி நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

உயர்நீதிமன்றக் கிளையில் மனு

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தவறான தகவலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கணக்கு காட்டும் நோக்கிலும், மனுதாரர் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும் , அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு அனைத்துவிதமான ஒத்துழைப்பையும் வழங்குவேன். மேலும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு. கட்டுப்படுகிறேன். ஆகவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடம்பூர் ராஜுவுக்கு முன்ஜாமீன்

மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கடம்பூர் ராஜுநீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாக கூறி முன்ஜாமீன் வழங்க கோரினார். இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே வழக்கு விசாரணையின் போது, குற்றவியல் பிரிவு 506ன் கீழ் பதியப்படும் அனைத்து வழக்குகளிலும் இதே நிலைப்பாடு பின்பற்றப்படுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>