×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு!: திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை 15,000 ஆக குறைப்பு..!!

ஆந்திரா: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர். வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதற்கு இணங்க இக்கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பின் அளவு அதிகரித்து வருகிறது. கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருப்பதியில் பாதிக்கும் குறைவான பக்தர்களே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருமலையில் உள்ள அன்னமயப்பவனில் கூடுதல் தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி உள்ளது. எனவே தினசரி வழங்கப்படும் சுவாமி தரிசன இலவச டிக்கெட் 25 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக குறைக்கப்படுகிறது என்றார்.

அதேநேரத்தில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்று தீர்ந்துவிட்டால் வரும் மே மற்றும் ஜூன் மாதத்தில் தான் அதுகுறித்து முடிவு சொல்ல இயலும் என்றும் கூறினார். மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை மற்றும் ஆர்ஜித சேவை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிப்பது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். காய்ச்சல் மற்றும் சளி அறிகுறி உள்ள பக்தர்கள், திருப்பதி வருவதை தவிர்க்க வேண்டும் என்று தர்மா ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் தரிசனம் முடிந்த பக்தர்கள், உடனடியாக ஊர் திரும்பவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags : Swami Darshan ,Tirupati , Corona, Tirupati, ticket, discount
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...