×

வாக்கு வங்கி அரசியலுக்காக மாநிலத்துக்கு மாநிலம் ஆளுமை, கலாச்சார அடையாளங்களை அபகரிக்கும் பா.ஜ

குறுகிய அரசியல் லாபத்துக்காக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. கட்சிபேதமின்றி பழம்பெரும் ஆளுமைகளையும் பண்பாட்டு, கலாச்சார அடையாளங்களையும் அபகரிப்பது அதில் ஒன்று. தனது சித்தாந்தத்திற்கு சற்றும் தொடர்பில்லாத ஆளுமைகளை கொஞ்சமும் தயக்கமின்றி, துணிந்து தன் கட்சி அடையாளமாக மாற்றிக்கொள்கிறது. புத்தரில் தொடங்கி அம்பேத்கர் வரை இந்த ‘வளைத்துப் பிடித்தல்’ நீள்கிறது. வைதீக மரபையும் பழமைவாதத்தையும் எதிர்த்தவர் புத்தர். ஆனால் அவரை இந்துத்துவ பிரிவாக சித்தரித்து சுவீகரித்துக் கொள்கிறது பா.ஜ. மதவாதம், சாதியத்திற்கு எதிராக முழங்கிய அம்பேத்கரையும் அவரது ஒரு சில மேற்கோள்களை சுட்டி தன்வயப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. நவீன இந்தியாவின் மனு என்றெல்லாம் புது சொல்லாடல் கொடுத்து அம்பேத்கரை, ‘தங்களவர்’ ஆக்கிக் கொள்ள விழைகின்றனர். ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியே இது.
 பாஜவின் இத் திட்டம் தேர்தல் காலங்களில் இன்னும் வீர்யமாக களமாடுகிறது.

தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்க சட்டசபைகளுக்கு இப்போது தேர்தல் என்பதால், இந்த மாநிலங்களின் ஆளுமைகளை, கலாச்சார அடையாளங்களை தனது குடையின் கீழ் கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் காமராஜரையும் அதிமுக தலைவர் எம்ஜிஆரையும் தனது ‘அணிக்குள்’ சேர்த்துவிட்டது. கடந்த பிப்ரவரி 25ல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க கோவை வந்தார் பிரதமர் மோடி. அந்த விழாவின்போது காமராஜர், எம்.ஜி.ஆரின் கட்அவுட்கள் பாஜ தலைவர்களுடன் சேர்த்து கம்பீரமாக நின்றிருந்தது. இது சர்ச்சையானது. காங்கிரஸ் கொதித்தது. ‘மாற்று அமைப்பு, மாற்றுக் கருத்து, மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை தங்களது ஆள் போல பாஜ சித்தரிப்பது வெட்கக்கேடானது. காமராஜரை சொந்தம் கொண்டாட பாஜவுக்கு எப்படித் துணிவு வந்தது’ என கேட்டது.  ஆனால் இதை பாஜ கண்டுகொள்ளவில்லை. ‘காமராஜர் காங்கிரசிலிருந்து பிரிந்து ஸ்தாபன காங்கிரஸ் தொடங்கியவர். 1971 தேர்தலில் ஜனசங்கத்தோடு கூட்டணி வைத்தவர். நியாயப்படி அவர் எங்களுக்கு சொந்தமானவர். அவரை கொண்டாட காங்கிரசுக்குத்தான் உரிமை இல்லை.

காமராஜரின் பாரம்பரியத்தையும் கொள்கைகளையும், நரசிம்மராவ் போன்ற திறமையான பிரதமரின் பங்களிப்பையும் மறந்து புறக்கணித்தது காங்கிரஸ்தான்’ என காரணங்களை தேடி இதற்கு பதில் கொடுத்தது பாஜ.  எம்ஜிஆரை எடுத்ததில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஊழலில் திளைத்த அதிமுக கட்சி மொத்தமுமே இப்போது பாஜவின் கைக்குள் இருப்பதால், இதுகுறித்து அக் கட்சியில் இருந்து சின்ன முணுமுணுப்பு கூட எழவில்லை.   இதைக்காட்டிலும் பாஜ பிரதானமாக குறி வைத்திருப்பது மேற்கு வங்கத்தைத்தான். அங்கு எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என வெறிகொண்டு இயங்கி வருகிறது. இதற்காக கணக்கிலடங்காத ‘ஆளுமை அபகரிப்பில்’ ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. எவர் நினைவிலும் இல்லாத ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை, இந்த தேர்தல் காலத்தில் தூசி தட்டி எழுப்பியிருக்கிறார்கள்.  நேரு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் முகர்ஜி.

பின்னர் நேருவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பதவியை ராஜினாமா செய்து, ஆர்எஸ்எஸ் உதவியுடன் பாரதிய ஜன சங்கத்தை தொடங்கியவர். வங்கத்தின் மண்ணின் மைந்தரான ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை மேற்கு வங்க அரசுகள் திட்டமிட்டு புறக்கணித்து விட்டன என குற்றம்சாட்டுகிறது பாஜ. பாடப்புத்தகங்களில் அவரைப் பற்றி சிறு குறிப்புக் கூட இல்லை, அவரைப் போற்றும் எந்த அரசு நிகழ்வும் நடப்பதில்லை என புகாரை அடுக்குகிறது. இனி இந்த தலைவரின் புகழ்பரப்ப நாங்கள் இருக்கிறோம் என களத்தில் இறங்கியிருக்கிறது.  150 ஆண்டு பழமையான கொல்கத்தா துறைமுகத்துக்கு கடந்த ஜனவரியில் நடந்த விழாவின்போது ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை சூட்டினார் பிரதமர் மோடி. ராஜ்பவனில் அவரது உருவப்படம் திறக்கப்பட்டது. ஆனால் முகர்ஜியின் உறவினர்களே, ‘இது வெறும் தேர்தல் ஸ்டன்ட்’ என புகார் தெரிவித்துள்ளனர். முகர்ஜியின் உறவினரான கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சித்ததோஷ் முகர்ஜி, ‘நிறுவனங்களுக்கு வெறுமனே முகர்ஜியின் பெயரை வைப்பது, அவரது படத்தை திறப்பது மட்டுமே அவருக்கு புகழ் சேர்த்து விடாது’ என கூறியிருக்கிறார்.

 மேலும், பாஜவின் இந்த புகாரை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்திருக்கிறது. அக் கட்சி எம்.பி சவுகதா ராய் கூறுகையில், ‘‘ஷ்யாமா பிரசாத் முகர்ஜியை வங்கத்தின் அடையாளமாக கொள்ள முடியாது. அவர் வங்கத்துக்கு எந்த பங்களிப்பும் செய்ததில்லை. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு இல்லை. அவரை ஜனசங்கம் என்ற சிறிய வட்டத்துக்குள்தான் அடைக்க முடியும்’’ என தெரிவித்துள்ளார். இதைத் தொடந்து, வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜியை கையிலெடுத்தது பாஜ. ‘சட்டர்ஜியின் புகழை மேற்கு வங்க அரசு மறைக்கப் பார்க்கிறது. வந்தே மாதரம் பாடலின் சில வரிகள் ஏற்புடையதல்ல என சிறுபான்மை பிரிவினர் அதை பாடாமல் புறக்கணிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை மனதில் கொண்டு ஒதுக்கிவைத்துள்ளனர்..’ என மேற்குவங்கத்தில் பிரசாரம் செய்தபோது பிரதமர் மோடி வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இன்னும் ஒருபடி மேலே போய், ஹூக்ளி நதிக்கரையில் அமைந்திருக்கும் பங்கிம் சந்திர சட்டர்ஜி வசித்த பாரம்பரிய பெருமை மிக்க, ‘வந்தே மாதரம் பவனை’ மாநில அரசு கண்டுகொள்ளவே இல்லை. கவனிப்பாரற்று அந்த பவன் சிதிலமடைந்து கிடக்கிறது என்றும் முழங்கினார்.

ஆனால் உண்மையில், அந்த பாரம்பரிய பெருமை மிக்க வீடு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். ‘ஹுக்ளி ஹெரிடேஜ்’ என்ற முகநூல் பக்கத்தில் வந்தேமாதரம் பவன் மிக அருமையாக பராமரிக்கப்பட்டு வருகிறது என அதன் படங்களையும் வெளியிட்டிருந்தனர்.  ஆனால் இந்த எதிர்ப்புகளை எல்லாம் சட்டைசெய்யாமல் அடுத்தடுத்து ‘ஐகான்’களை பிடிப்பதில்தான் பாஜ வேகம் காட்டுகிறது. பி.சி.ராய் என்றழைக்கப்படுகிற டாக்டர் பிதன் சந்திர ராய் எனும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரையும் தனது வளாகத்துக்குள் ஐக்கியமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரான பி.சி.ராய் 1948ம் ஆண்டு தொடங்கி அவர் இறக்கும் 1962 வரை 14 ஆண்டுகள் மேற்கு வங்க முதல்வராக இருந்தவர். நவீன வங்கத்தை உருவாக்கியதில் மிகப்பெரும் பங்காற்றியவர். துர்காபூர் எனும் நாட்டின் மிகப்பெரிய தொழிற்பேட்டை இவரது முயற்சியில் உருவானதே. மருத்துவத்துறைக்கும் அளப்பரிய பங்காற்றியவர். இவரது நினைவாகத்தான் ஜுலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ‘பி.சி.ராய் வழியில் மேற்குவங்கத்தில் ஆட்சி நடத்துவோம்..’ என்று இப்போது எந்த சங்கோஜமும் இல்லாமல் பாரதிய ஜனதா கூறிவருகிறது.

 ‘‘மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேலை நாங்கள் போற்றுகிறோம். அந்த வரிசையில் பி.சி.ராயையும் போற்றுகிறோம். அவரது மாண்பை, தொலைநோக்கு சிந்தனையை திரிணாமுல் ஆட்சி சிதைத்து விட்டது. காங்கிரசோ மறந்து விட்டது...’’ என்கிறது பாஜ. பி.சி.ராயை கொண்டாடுவதற்கு மற்றொரு காரணத்தையும் முன்வைக்கிறது. ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு அணுக்கமாக இருந்தவர் பி.சி.ராய். 1953ல் ஸ்ரீநகரில் முகர்ஜி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரிக்க வேண்டும் என அப்போதைய பிரதமர் நேருவுக்கு கடிதம் எழுதியவர் பி.சி.ராய் என புளகாங்கிதத்துடன் சொல்லி, ஈடு செய்கின்றனர்.  ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோன்ற தேர்தல் வேலைகளை செய்தாலும், பாரதிய ஜனதாவின் பொது நோக்கம் ஒன்றே. நாடு முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவுவது. ஏக இந்தியா தத்துவம். அதற்கு பன்முகத்தன்மை, கலாச்சார வேறுபாடுகள் எல்லாம் உவப்பானது அல்ல.

தனித்துவமான மாநிலப் பெருமைகள், பிராந்திய அடையாளங்கள் இடையூறு ஏற்படுத்துபவை. ஒன்று, அவற்றை தாக்கி அழிக்க வேண்டும் அல்லது தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இயங்கி வருகிறது. ஆனால் அது நிறைவேறுவதற்கான சாத்தியம் இல்லை. காரணம், மாநில நலன், மாநில உரிமைகள் குறித்த உணர்வு மக்களிடம் முன்னெப்போதையும் விட இப்போது கூர்மையடைந்து இருக்கிறது. எனவே அடையாளங்களை அபகரிப்பது போன்ற வேலைகள் சிறுபிள்ளைத்தனமாகவே அமையும். தேர்தல் முடிவுகள் இந்த உண்மையைக் காட்டும் என்கின்றனர் சமூக விமர்சகர்கள்.

கேரளாவில் மெட்ரோமேன்
கேரளத்தை பொறுத்தவரை பெரிய ஆளுமைகள்  கிடைக்காத தவிப்பில் பாஜ இருந்தது. கவியும் சமூக சீர்திருத்தவாதியுமான  குமாரன் ஆசான் போன்றோரின் மேற்கோள்களை சுட்டிக்காட்டி வந்தார் மோடி.  கடைசியில் 88 வயதான மெட்ரோ மேன் தரனை வளைத்துப் பிடித்தது. மலப்புரத்தில்  மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில் பாஜவில் இணைந்தார் பெரியவர்  ஸ்ரீதரன். இப்போது பாலக்காடு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.  பினராயியின் செல்வாக்கை மெட்ரோ மேன் தகர்ப்பார் என பாஜ நம்புகிறது.

பதவியை கொடுத்தும் நழுவிய கிரிக்கெட் வீரர்
கொல்கத்தா  இளவரசராக கொண்டாடப்படும் இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலியையும்  வளைக்கத் திட்டமிட்டது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாக்கூர்  ஆதரவோடு 2019ல் கங்குலி பிசிசிஐ தலைவராக்கப்பட்டார்.  இதைத்தொடர்ந்து அவர்  பாஜவில் இணைந்துவிடுவார் என பலமாக பேச்சு அடிபட்டது. உண்மையில் கங்குலியை  கட்சியில் சேர்த்து மம்தாவுக்கு எதிராக களம் இறக்குவதே பாஜவின் திட்டமாக  இருந்தது. ஆனால் உடல்நல குறைவை காரணம் காட்டி கங்குலி சாமர்த்தியமாக  தப்பிவிட்டார். எனினும் பாஜவின் வலை அவரின் தலை மேல் இன்னும்  சுழன்றுகொண்டுதான் உள்ளது.

முஜிபுர், மிதுனை சொந்தமாக்கி திரிணாமுலுக்கு செக்
மறைந்த தலைவர்கள் மட்டுமல்லாமல்  புகழ்வாய்ந்த தற்கால ஆளுமைகளையும் சுருட்டி எடுப்பதில் பாஜ ‘வல்லமை’  கொண்டதாக உள்ளது. தொடக்க காலத்தில் நக்சல்பாரி இயக்க தொடர்புகளில் இருந்து  பின்னர் பிரபல நடிகராகி, திரிணாமுல் காங்கிரசில் இணைந்து நாடாளுமன்ற  உறுப்பினராகி, அங்கிருந்து விலகி பல வண்ணம் மாறிய டிஸ்கோ டான்ஸர் மிதுன் சக்கரவர்த்தியை பாஜ கட்சியில் சேர்த்துக்கொண்டது.  உச்சபட்சமாக தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி பிரதமர் மோடி வங்கதேச பயணம் மேற்கொண்டு முஜிபுர் ரகுமானையும்  எடுத்துக்கொண்டார். வங்கதேச விடுதலைக்காக சத்தியாக்கிரகம் செய்து சிறை  சென்றேன் என பேசி உருக வைத்தார். வங்கத்திலிருந்து எல்லை தாண்டி மேற்கு  வங்கத்தில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் வாக்கு வங்கி மம்தாவுக்கு  சொந்தமானது. அதை தகர்க்கும் முயற்சியே இது என கூறப்படுகிறது.

அசாம் மக்களை வசீகரிக்க தருண் கோகய்க்கு விருது
அசாம் மாநிலத்திலும் இதே பாணியில்  ‘ஐகான்’ அபகரிப்பு வேலையை பாஜ நடத்தியிருக்கிறது. அசாம் தேர்தலை ஒட்டி  அங்கும் ஒரு காங்கிரஸ் தலைவரைத்தான் இழுத்திருக்கிறது. அவர், அசாமின் அமைதி  நாயகர் என போற்றப்படும் தருண் கோகய். 2001ம் ஆண்டு தொடங்கி மூன்று முறை  முதல்வர் பொறுப்பு வகித்தவர். பாஜவை கடுமையாக எதிர்த்து வந்தவர். ஆனால்  காங்கிரசுக்குள் பிளவு ஏற்படுத்தி அங்கு பாஜ நுழைந்தது. எனினும் தருண்  கோகய்க்கு அசாம் மக்களிடம் இருக்கும் செல்வாக்கை இந்த தேர்தலில் பயன்படுத்த  தயங்கவில்லை. மறைவுக்கு பின் தருண் கோகய்க்கு பத்மபூஷண் விருதை வழங்கி  மத்திய பா.ஜ. அரசு கவுரவித்தது. இதற்கு ராகுல் காந்தி கடுமையாக எதிர்வினையாற்றினார். ‘‘தருண் கோகயின் புகழை தேர்தலுக்கு பயன்படுத்த  நினைத்து பத்மபூஷண் விருது விளையாட்டை பாஜ நடத்துகிறது.

உண்மையில் இது  தருண் கோகய்க்கு கொடுக்கப்பட்ட கவுரவமல்ல. அவருடன் சேர்த்து பிரதமர்  மோடியின் முன்னாள் முதன்மை செயலாளருக்கும் இந்த விருதை  கொடுத்திருக்கிறார்கள். தருண் கோகய்யும் மோடிக்கு ஆமாம் சாமி போடுகிற ஆளும்  ஒன்றா...’’ என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் பெயர்  குறிப்பிடாமல் விட்ட அந்த முன்னாள் முதன்மை செயலாளர் - நிருபேந்திர மிஸ்ரா.


Tags : BJP , The BJP, which usurps state-to-state personality and cultural identities for vote bank politics
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு