×

வங்கதேசத்தை வீழ்த்தி டி20 தொடரை வென்றது நியூசி

நேப்பியர்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் 28ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தை 66ரன்  வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடரில் நியூசி  1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது டி20 போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.  முதலில் களமிறங்கிய நியூசி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.  இடையிடையே  மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.   ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அப்போது நியூசி  17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 173ரன் எடுத்திருந்தது. பொறுப்புடன் விளையாடிய கிளென் பிலிப்ஸ் 58*(31பந்து, 5பவுண்டரி, 2சிக்சர்), டாரியல் மிட்சல் 34*(16பந்து, 6 பவுண்டரி)ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மெகதி ஹசன் 2 விக்கெட் எடுத்தார்.

ஓவர்கள் குறைக்கப்பட்டதால் டக்வொர்த் லீவிஸ் விதிகளின் படி வங்கதேசம் 16ஓவரில் 170ரன் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்து. ஆனால் அந்த அணி 16ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 142ரன் மட்டுமே எடுத்தது. அதனால் நியூசி 28ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சவுமியா சர்க்கார் 51(27பந்து, 5பவுண்டரி, 3சிக்சர்), முகமது நயீம் 38(35பந்து, 4பவுண்டரி) ரன் எடுத்தனர். நியூசி தரப்பில் கேப்டன் டிம் சவுத்தீ, பென்னட், மிலன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசி கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது.



Tags : New Zealand ,Bangladesh ,T20 , New Zealand beat Bangladesh to win T20 series
× RELATED ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை...