பாட்டாளி மக்கள் கட்சி பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது: காடுவெட்டி குரு மகள் தாக்கு

சென்னை: பாமக இப்போது பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது என காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வக்கீல் எழிலரசனை ஆதரித்து, காடுவெட்டி குரு மகள் விருத்தாம்பிகா, மருமகன்  மனோஜ் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழம்பி, திருப்பருத்திக்குன்றம், கூரம், திம்மசமுத்திரம், தாமல்,  பாலுசெட்டிசத்திரம், கோவிந்தவாடி அகரம், கோனேரிக்குப்பம்  உள்பட பல பகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அவரை ஆதரித்து, முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டு குருவின் மகள் விருத்தாம்பிகா, அவரது கணவர் மனோஜ் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள் பேசியதாவது: பாமக, பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி என அக்கட்சியின்  நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் கூறுகிறார்கள். ஆனால் அரக்கோணம், நெமிலி ஆகிய இடங்களில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான் பேசும்போது, பெண் என்றும் பாராமல் பாமகவினர் என்னை தாக்க வருகின்றனர். அனைவரும் மது அருந்திவிட்டுதான் வந்தனர்.

ஆனால் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மதுவிலக்கு குறித்து தேர்தல் நேரத்தில் மட்டும் ஸ்டன்ட் அடிக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் வன்னியர்களுக்கு 13 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் தேர்தலுக்காக 10.5 சதவீதம் இடஒதுக்கீடு என அறிவித்துள்ளனர். இதுவும் தற்காலிகமானதுதான் என துணை முதல்வர் உள்பட அமைச்சர்கள் வெளிப்படையாகவே தெரிவிக்கின்றனர். வன்னியர்களுக்காக 30 வருடங்களுக்கும் மேலாக காடுவெட்டி குரு உழைத்தார். அவரை மூத்த மகன் என்று சொல்லும் ராமதாஸ், 3 ஆண்டுகளாக நினைவுநாள் நிகழ்ச்சி நடத்த விடாமல் 144 தடை உத்தரவு போட வைக்கிறார். அன்புமணி, அரசியலுக்கு வருவதற்கு முன் பாமக ஒழுங்காக செயல்பட்டது. ஆனால் அன்புமணி வருகைக்கு பிறகு பாமக முழுக்க பாசமுள்ள மகன் கட்சியாக மாறிவிட்டது. எனவே, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் எழிலரசனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறன் என்றார்.

Related Stories:

>