×

மேலவை உறுப்பினர் தேர்வு முறை மாறியுள்ளது: மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி வேதனை

பெங்களூரு: மேலவை உறுப்பினர்களாக கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள் அலங்கரித்த நிலையில் இப்போது அந்த முறை  முற்றிலும் மாறியுள்ளது என மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறினார். கர்நாடக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் உதவியுடன் கன்னட வளர்ச்சி வாரியம் சார்பில் கன்னட மொழி வளர்ச்சி மற்றும் பயன்பாடு என்ற கருத்தரங்கு பெங்களூருவில் நடந்தது. மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி இதை தொடங்கி வைத்து பேசியதாவது: ``கர்நாடக பேரவையில் இதற்கு முன்பு கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றனர். மேலவை விவாதத்தில் சிறப்பான கருத்துகள் இடம் பெறும். தற்போது இது முற்றிலும் மாறிவிட்டது. மேலவை தலைவரை மானை துரத்தும் 20 நாய்களை போல் இப்போதைய உறுப்பினர்கள் கேள்வி கேட்கிறார்கள். இது மிகவும் வேதனை அளிக்கிறது.

மேலவை உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பதற்காக ரூ.14 லட்சம் செலவாகியுள்ளது. சராசரியாக ஒரு கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசின் சார்பில் ரூ.5 முதல் ரூ.8 லட்சம் வரை செலவிடப்படுகிறது. இவ்வளவு பணம் செலவிடப்பட்டாலும் உறுப்பினர்கள் மேலவை அலுவல்களை சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை. கன்னட கலைஞர்களில் சிலர் ஆங்கிலத்திலும் சிலர் பாதி கன்னடம் மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுகின்றனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 23 சதவீதம் மட்டுமே கன்னடர்கள் வசித்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே கன்னட மொழியை பயன்படுத்துகின்றனர். எல்லை பகுதிகளில் கன்னட மொழியின் பயன்பாடு குறைந்துவரும் நிலையில் அரசின் சார்பில் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெயர் பலகைகளில் பெரிய எழுத்துகளில் கன்னடம் இடம் பெறுவது மட்டும் இன்றி கன்னட மொழி இயல்பாக பேசப்படும் வகையில் மாறவேண்டும்’’, என்றார்.

கன்னட வளர்ச்சி வாரிய தலைவர் நாகாபரணா கூறுகையில் ``வங்கியில் சேருகிற ஊழியர்கள் 6 மாதத்தில் கன்னடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்பது விதி. 2014ல் வங்கியில் சேர்ந்த ஊழியர்களில் பெரும்பான்மையான நபர்கள் இன்னும் கன்னடம் அறிந்து கொள்ளவில்லை. நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கன்னடம் 100 சதவீதம் இடம் பெற வேண்டும். பத்திரிகைகளில் சிறந்த கன்னட வார்த்தைகள் இடம் பெறவேண்டும்’’ என்றார். கருத்தரங்கில் கர்நாடக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சிவானந்த தகடூரு, பொது செயலாளர் லோகேஷ், பெங்களூரு மாவட்ட தலைவர் சோமசேகர் காந்தி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் 23 சதவீதம் மட்டுமே கன்னடர்கள் வசித்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே கன்னட மொழியை பயன்படுத்துகின்றனர்

Tags : Upper house ,Basavaraj Horati , Upper house member selection system has changed: Upper house leader Basavaraj Horati is in pain
× RELATED கர்நாடகா பா.ஜ பெண் தலைவர் மீண்டும் காங்கிரசில் இணைந்தார்