×

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் ஐசியூ படுக்கைகள் அதிகரிக்கப்படும்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ) படுக்கைகளின் எண்ணிக்கையை நகரில் உள்ள சில மருத்துவமனைகளில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் தற்போது கொரோனா தொற்ற பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த வாரம் முதல் தொடர்ந்து 1,500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது. தேசிய தலைநகரில் திங்களன்று 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவு யெ்யப்பட்டது.

இது கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதிக்கு பின்னர் பதிவான ஒருநாளில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். அதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,881 பேருக்கும், அதற்கு முந்தைய மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் தலா 1,500 க்கும் மேற்பட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனினும், நேற்று ஆயிரத்துக்கு கீழ் தொற்று பாதிப்பு பதிவானது. இது ஹோலி பண்டிகையின் காரணமாக மிகக்குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. இதனால், தற்போது நகரில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒரு சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிக்கான சாதாரண மற்றும் ஐசியு படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் படுக்கை கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். தற்போதுள்ள நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். எனவே, கவலைப்பட தேவையில்லை. எனினும், மக்கள் தயவுசெய்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார். தற்போது நாட்டில் கொரோனா நிலை குறித்து விளக்கம் அளித்துள்ள மத்தியஅரசு, மோசம் என்கிற நிலையிலிருந்து மிக மோசம் என்கிற நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதுபற்றி நிதி ஆயோக் உறுப்பினர்(நுகாதாரதம்) வி கே பால் கூறுகையில், ”கோவிட்-19 சூழல் மோசம் என்கிற நிலையிலிருந்து மிக மோசம் நிலையை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் அதிகரித்து வரும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கவலைக்குரியதாக உள்ளது. எனவே நாட்டின் எந்தவொரு பகுதியும், மாநிலமும் அல்லது மாவட்டமும் சாதாரணமாக இருந்துவிடக்கூடாது. நாங்கள் பெருகிய முறையில் கடுமையான மற்றும் தீவிரமான சூழ்நிலையை எதிர்கொள்கிறோம், எனவே  உயிர்களை காப்பாற்றவும், நோயை கட்டுப்படுத்தவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். அதிகரித்தும் தொற்று பாதிப்பை சமாளிக்க ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்த  வேண்டும்” என்றார்.

* கெஜ்ரிவாலை சந்தித்த சுவிஸ் நாட்டு தூதர்
சுவிட்சர்லாந்து நாட்டு தூதர் ரால்ப் ஹெக்னர் நேற்று டெல்லி தலைமை செயலகத்தில் முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். டெல்லியில் கொரோனா தாக்கத்தை சமாளித்த விதம் குறித்து கேட்டறிந்த அவர் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பாராட்டு தெரிவித்தார். இதுபற்றி டிவிட்டரில் கெஜ்ரிவால் கூறும்போது,’ சுவிஸ் தூதர் ரால்ப் ஹெக்னருடனான சந்தித்து இனிமையாக இருந்தது. அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தேன். டெல்லியில் காற்று தரத்தை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். மேலும் கொரோனா நிர்வாகம் குறித்து அவர் கேட்டறிந்த அவர் பாராட்டு தெரிவித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* 14 தனியார் மருத்துவனைகளில் ஐசியூ படுக்கைகள் நிரம்பின
டெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. டெல்லி அரசு மருத்துவமனைகளில் 787 ஐசியூ படுக்கைள் உள்ளன. அதில் 278 படுக்கைகள் நிரம்பி விட்டன. வெண்டிலேட்டர் இல்லாத 1229 கொரோனா படுக்கைகளில் 379 படுக்கைகள் நிரம்பி உள்ளன. அகர்செயின் மருத்துவனையில் 15, ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 6, மேக்ஸ் மருத்துவமனையில் 5, போர்ட்டிஸ் மருத்துவமனையில் 5 ஐசியூ படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. ஷாலிமார் பாக் மருத்துவமனையில் ஒரு படுக்கை கூட காலியாக இல்லை. துவார்க்கா வெங்கடேஸ்வரா மருத்துவமனை, வசந்த் கஞ்ச் மருத்துவமனை, மகாராஜா அக்ராசென் மருத்துவமனையில் அனைத்து ஐசியூ படுக்கைகளும் நிரம்பி விட்டன. இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் 24, பாலாஜி மருத்துவமனையில் 21, பஞ்சாபி பாக் மகாராஜா அக்ராசென் மருத்துவமனை, மேக்ஸ் மருத்துவமனையில் அனைத்துபடுக்கைகளும் நிரம்பி விட்டன. டெல்லி மருத்துவமனைகளில் 5,784 படுக்கைகளில் 1584 படுக்கைகள் நிரம்பி விட்டன.

* 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவை
மத்திய அரசின் சுகாதாரத்தறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கொரோனா குறித்த தற்போதைய நிலையை விளக்கியதை அடுத்து கெஜ்ரிவால் இந்த பதிவை ட்விட் செய்துள்ளார். முன்னதாக, ராஜேஷ் பூஷண் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”டெல்லியின் 10 மாவட்டங்களையும் ஒரே மாவட்டமாக கருதினால் இங்கு தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது தெரியவரும். இன்றைய நாளை பொறுத்தவரை, தொற்று பாதிப்பு உள்ள 10 மாவட்டங்களாக பூனே(59,475), மும்பை (46,248), நாக்பூர்(45,322), தானே (35,264),நாசிக் (26,553), அவுரங்காபாத்(21,282), பெங்களூரு நகரம்(16,259),நந்தெட்(15,171), டெல்லி (8,032) மற்றும் அகமத்நகர்(7,952) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவையாகும்” என்றார். இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ள இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 56,211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், மகாராஷ்டிராவில் பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை மட்டும் 60 சதவீதம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal , ICU beds to be increased as corona impact increases in Delhi: Chief Minister Kejriwal announces
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...