×

விஸ்ட்ரான் கம்பெனியில் வேலைக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும்: விவசாய சங்கம் மனு

கோலார்: விஸ்ட்ரான் கம்பெனியில் பணியில் சேர நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பை தளர்த்த உத்தரவிடகோரி கர்நாடக மாநில விவசாய சங்கம் மற்றும் பசுமைப்படை நிர்வாகிகள் கூடுதல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் பசுமைப்படை நிர்வாகிகள் கூடுதல் கலெக்டர் சினேகாவை நேரில் சந்தித்து கொடுத்த மனுவில், கோலார் தாலுகா, நரசாபுரா தொழிற்பேட்டையில் இயங்கிவரும் விஸ்ட்ரான் தொழிற்சாலையில் 25 வயதுக்கு உட்பட்டவர்களை மட்டும் பணியில் சேர்த்து கொள்கிறார்கள். மேலும் மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமில்லாமல், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தி வருகிறார்கள். இதனால் கோலார் மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகிறார்கள். மாநிலத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் கோலார் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டது. வறட்சி பாதித்த மாவட்டத்திற்கு மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பு வழங்க மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி நரசாபுராவில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது புதிய தொழிற்சாலைகளில் உள்ளூரை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பதாக அரசு உறுதியளித்தது. ஆனால் தற்போது பணியில் சேர வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளதுடன் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க விஸ்ட்ரான் கம்பெனி நிர்வாகிகளுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வயது வரம்பை தளர்த்துவதுடன் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tags : Wistron Company ,Agricultural , To relax the age limit for employment in Wistron Company: Agricultural Association Petition
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி