முதல்வருடன் சென்றபோது கார்கள் மோதி விபத்து: சபாநாயகர் தனபால், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உயிர் தப்பினர்..!

தாராபுரம்: தமிழகம் மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல் பாரதிய ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவரை, விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வரவேற்றனர். பின்னர், தனி ஹெலிகாப்டரில் கேரளா மாநிலம் பாலக்காடு புறப்பட்டு சென்றார். அங்கு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொதுக்கூட்டத்திற்கு வர இருந்ததால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் முன்கூட்டியே தாராபுரம் செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி, 11 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து முதல்வர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் கார்கள் தாராபுரத்தை நோக்கி பயணித்தன.  முதல்வரின் கார் முன்னே செல்ல, சபாநாயகர் தனபால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரது கார்கள் பின்னால் சென்றுகொண்டிருந்தன. முற்பகல் 11.45 மணியளவில் தாராபுரம் சுங்கச்சாவடி அருகே காதபுள்ளம்பட்டி என்ற இடத்தில் மின்னல் ேவகத்தில் பாய்ந்தன. அப்போது, சபாநாயகர் தனபால் காருக்கு முன்னே சென்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் டயர் திடீரென வெடித்தது. இதன்காரணமாக, வாகனம் நிலைதடுமாறியது. வாகன ஓட்டுனர் நிலைமையை சமாளித்து, கவிழாத வகையில் பார்த்துக்கொண்டார்.  ஆனால், பின்தொடர்ந்து சென்ற தனபால் கார், எஸ்.பி.வேலுமணியின் கார் அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக மோதின.

இதில், இரு கார்களின் ஏர் பேக்-குகள் அடுத்தடுத்து விரிந்த காரணத்தால், உள்ளே அமர்ந்திருந்த சபாநாயகர் தனபாலும், மற்றவர்களும் காயமின்றி தப்பினர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவரது காரில் சென்றதால் காயமின்றி தப்பினார்.

இந்த விபத்தை தொடர்ந்து, சபாநாயகர் தனபால், பின்னால் வந்துகொண்டிருந்த அதிமுக நிர்வாகியின் காரில், திட்டமிட்டபடி தாராபுரம் புறப்பட்டு சென்றார். விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிரேன் உதவியுடன் கார்களை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில், வேலுமணியின் கார், தனபால் கார், பாதுகாப்பு வாகனம் ஆகிய 3  கார்கள் சேதம் அடைந்தன. பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த  சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

Related Stories:

>