காவிரி-குண்டாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதி அதிமுக, கூட்டணி கட்சிகளான பாஜ - தமாகா வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வந்துள்ளோம். திருச்சி மாவட்டத்தில் 16 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டி தந்தோம். ஆட்சி அமைந்ததும் நிலம், வீடு இல்லாதவர்களுக்கும் அடுக்குமாடி வீடு கட்டி தருவோம். பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு புது வீடு கட்டித்தருவோம்.

நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்ற முறையில் அரசு பள்ளி மாணவர்களின் பிரச்னையை உணர்ந்தவன். நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அப்பல்லோ மருத்துவமனையை விட கூடுதல் வசதி கிடைக்கிறது. டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் காவிரி நீரை நம்பி தான் உள்ளன. கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தி வருகிறேன். ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களிடம் பேசி சம்மதம் பெற்றுள்ளோம். இதற்காக தேவையான நிதி பெறவும், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவது போன்ற காரணங்களுக்காகதான் மத்திய அரசுடன் நாங்கள் இணக்கமாக உள்ளோம்.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் மூலம் காவிரியில் கலக்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி வழங்க தயாராக உள்ளது. கடந்த சில ஆண்டுக்கு முன் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. வறட்சியால் பாதித்த மக்களுக்கு ரூ.2,400 கோடி வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளோம். பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். ரூ.14,400 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்ட காவிரி-குண்டாறு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தமிழக சட்டமன்றத்தில் ஒரு நாள் கூட ஆப்சென்ட் ஆகாத ஒரே முதல்வர் நான் மட்டும்தான்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>