×

தபால் வாக்கு பதிவு வலைதளத்தில் வைரலான விவகாரம்..! ஆசிரியை, கணவர், அமமுக நிர்வாகி கைது: தென்காசியில் பரபரப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குசீட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது தொடர்பாக ஆசிரியை, அவரது கணவர், அமமுக நிர்வாகி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கான வாக்குப்பதிவின் போது குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில்  வைரலாக பரவியது. இதுதொடர்பாக சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்னும் ஆசிரியையை சஸ்பெண்ட் செய்யுமாறு மாவட்ட கல்வித்துறை சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் திடீர் திருப்பமாக ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் கலெக்டரை நேரில் சந்தித்து, தான் தபால் ஓட்டை ெபறவில்லை, சமூகவலைதளத்தில் கணக்கும் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி உதவி தேர்தல் அதிகாரிகள் புகாரின்படி தென்காசி போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அது வருமாறு: உண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான வாக்குச்சீட்டை  பெற்றது தென்காசி  கல்வி மாவட்டம், சுரண்டையை அடுத்த வெள்ளக்கால் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி (50). அவரிடம் நடத்திய விசாரணையில் தனது மகனிடம் வாக்குச்சீட்டு எப்படி இருக்கும் என்று காண்பிப்பதற்காக வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், மகன் அந்தப்படத்தை தனது தந்தையும் அமமுக நிர்வாகியுமான கணேசபாண்டியனுக்கு அனுப்பியதாகவும் பின்னர் கணேச பாண்டியன் தனது கட்சியினர் அடங்கிய வாட்ஸ்அப் குழுவில் அதனை பதிவிட்டதாக கூறியுள்ளார்.

அதே குழுவில் இடம்பெற்றிருந்த தென்காசி கூலக்கடை பஜாரில் தேங்காய் வியாபாரம் செய்து வரும் அமமுக நிர்வாகியான செந்தில்குமார், தனது முகநூலில் பதிவேற்றம் செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.  இதையடுத்து ஆசிரியை கிருஷ்ணவேணி, அவரது கணவர் கணேச பாண்டியன், அமமுக  நிர்வாகி செந்தில்குமார் ஆகிய மூவரையும் தென்காசி போலீசார் கைது செய்தனர். மனஉளைச்சலுக்கு சிகிச்சை: செய்யாத தவறுக்காக சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான சுரண்டை ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்ந்து நேற்று சிகிச்சை பெற்றார்.

மாற்றி கொடுத்தவர் மீது நடவடிக்கை: இந்த விவகாரம் குறித்து தென்காசி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சித் தலைவருமான ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘ஆசிரியை சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் மீது தவறு எதுவும் இல்லை. சமூக வலைதளங்களில் வெளியான வாக்குச்சீட்டில் 0505 என்று அச்சிடப்பட்டிருந்தது. பதிவேட்டை சரிபார்த்தபோது தவறுதலாக வரிசை எண் 505 என்று சகாய ஆரோக்கியத்தின் பெயரை கொடுத்து விட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் 0505 என்ற வாக்குச்சீட்டு எண்ணுக்குரிய ஆசிரியை கடையநல்லூர் தொகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் காவல்துறையின் குற்ற நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தவறான நபரை அடையாளம் காட்டிய பணியாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சங்கரன்கோவிலில் வாக்குச் சீட்டை விநியோகம் செய்த போது சிலரிடம் கையெழுத்துப் பெறாமல் விநியோகம் செய்ததற்காக ஆர்ஐ ஒருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகாய ஆரோக்கியத்தின் மீது தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Tenkasi , Viral affair on postal vote registration website ..! Teacher, husband, administrator arrested: Tension in Tenkasi
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...