×

சாமை சோறு, கொள்ளு ரசம் சாப்பிட்ட தர்மபுரி மக்கள் தற்போது வளர்ச்சி அடைந்துள்ளனர்: ராமதாஸ் பேச்சு

தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோட்டில், தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி, அரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சம்பத் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்து, பாமக நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் நேற்று பேசியதாவது: ஒரு காலத்தில் பின்தங்கிய மாவட்டமாக தர்மபுரி இருந்தது. சாமை சோறு, கொள்ளு ரசம், ராகி உணவாக சாப்பிட்ட, தர்மபுரி மாவட்ட மக்கள், தற்போது வளர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் அவர்கள் வளர்ச்சி பெற வேண்டும். திருப்பூர், கோவை போன்று தர்மபுரி வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாற வேண்டும். தர்மபுரி மாவட்டம் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனாலும் இந்த மாவட்டம் கடைசி இடத்தில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்ந்தார்கள். ஒரு வீட்டில் சமைத்தால், பசியால் வாடும் மற்றொரு குடும்பத்திற்கு உணவு கொடுத்து வாழ்ந்தார்கள். அதுபோல் ஒரு தாயின் பிள்ளையாக நாம் வாழ வேண்டும்.

வெளியில் வந்து, மேடையில் ஏறி உங்கள் திருமுகங்களை பார்த்து பேச முடியவில்லை. கடந்த 10 நாட்களாகத்தான் வெளியே வந்து பேசுகிறேன். அதுவும் காருக்குள் இருந்தபடியே முககவசம் அணிந்து தான் பேசுகிறேன். நான் தினசரி 100 முதல் 500 பாட்டாளி சொந்தங்களை பார்ப்பேன். கொரோனா பரவல் எதிரொலியாக, கடந்த ஒருவருடமாக நான் உங்களை சந்தித்து பேசவில்லை. இனிமேல் வருவேன். முகக்கவசம் நீங்கள் எல்லாரும் அணிய வேண்டும் என்றார்.

Tags : Dharmapuri ,Ramadas , The people of Dharmapuri who ate samay sorghum and kollu rasam are now thriving: Ramadas speech
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...