×

போடி அருகே வாக்கு சேகரிக்க சென்றபோது ஓபிஎஸ் மீது சாணம் வீசிய அதிமுக தொண்டர்: பிரசாரத்தை பாதியில் முடித்து திரும்பினார்

போடி: போடி அருகே வாக்கு சேகரிக்க சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ் மீது சாணத்தை வீசிய அதிமுக தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், போடி தொகுதி அதிமுக வேட்பாளர், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே போடியில் வஉசி சிலை திறப்பின்போது, ஒரு பிரிவினர் அவரை எதிர்த்து ‘‘ஒழிக’’ கோஷமிட்டு அதிருப்தியை தெரிவித்தனர். 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரச்னையில் சீர்மரபினர் அமைப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் போடி, குயவர்பாளையம் பகுதியில் சமுதாயக்கூடத்தில் வாக்கு சேகரித்தபோது, பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக ஒரு சமூகத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் அவரையும், அவரது 2வது மகன் ஜெயபிரதீப்பையும் சிறை வைத்து முற்றுகையிட்டனர். இருவரையும் போலீசார் மீட்டனர். போடி தொகுதிக்கு உட்பட்ட நாகலாபுரத்திற்கு வாக்கு சேகரிக்க நேற்று முன்தினம் இரவு 9.50 மணியளவில் சென்ற ஓபிஎஸ், கெஞ்சம்பட்டி பிரிவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெட்டிக்கடைபின்புறம் மறைந்திருந்த ஒருவர், திடீரென ‘‘10 ஆண்டாக எதுவும் செய்யவில்லை’’ என கூச்சலிட்டவாறே, கையில் வைத்திருந்த சாணத்தை ஓபிஎஸ் மீது வீசினார். ஆனால், சாணம் ஓபிஎஸ் மீது விழாமல், அவருக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மீது விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் சாணம் வீசிய நபரை துரத்தி பிடித்து, போடி புறநகர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் பிரசாரத்தை பாதியில் முடித்துவிட்டு கிளம்பினார். விசாரணையில், ஓபிஎஸ் மீது சாணம் வீசியவர் நாகலாபுரம் அருகே கெஞ்சம்பட்டியை சேர்ந்த முருகன், அதிமுகவை சேர்ந்தவர் என்றும், நாகலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் காளிதாஸின் உறவினர் என்றும் தெரிய வந்தது. தொகுதி எம்எல்ஏவான ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக நாகலாபுரத்திற்கு எதுவும் செய்யவில்லை என்ற அதிருப்தியில் சாணத்தை வீசியதாக தெரிய வந்துள்ளது. போடி தொகுதியில் செல்லும் இடமெல்லாம் ஓபிஎஸ்சுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அதிமுகவை சேர்ந்தவரே சாணம் வீசியது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : AIADMK ,OPS ,Bodi , AIADMK volunteer throws dung on OPS while going to collect votes near Bodi: returns after halfway through campaign
× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!!