×

உறுப்புதானம் விழிப்புணர்வுக்கு காரணமாக இருந்தவர்: சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சுனில்குமார் இன்று ஓய்வு

சென்னை: உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட காரணமாக இருந்த சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சுனில்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
சிவில் சப்ளை டிஜிபியாக இருப்பவர் சுனில்குமார். இவரது பணிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால், இன்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையில் அவர் கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார். பின்னர் இரவில் போலீஸ் அதிகாரிகள் நடத்தும் விருந்திலும் கலந்து கொள்கிறார். சுனில்குமார், உத்திரப்பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர். 1961ம் ஆண்டு பிறந்தார். எம்ஏ, எல்எல்பி பட்டங்களை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்தவர். இவர், 1988ம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக பணிக்காக நியமிக்கப்பட்டார்.

கூடுதல் எஸ்பியாக வேலூரில் முதல் முதலாக பணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் காவல் துறையின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, மனித உரிமை ஆணையத்திலும் பணியாற்றினார். தற்போது சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபியாக உள்ளார். இவர், சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்தபோது உடலுறுப்பு தானத்திற்காக சென்னையில் பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது சென்னையில் ஆம்புலன்ஸ்கள் போக வழித்தடம் உடனே கிடைப்பதை நம்மால் காணமுடிகிறது. இதை தினகரன் பத்திரிகை மட்டுமே ஒரு பக்க செய்தியாக வெளியிட்டது. இவரது நடவடிக்கைக்கு பின்னர்தான் உறுப்பு தான விழிப்புணர்வு தமிழகத்தில் ஏற்பட்டது.

ஒரு ரயில் விபத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். முற்றிலும் அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையில் ரயில் எஞ்சின் ஓட்டுனரின்மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஐந்து அப்பாவிகளின் உயிரைப் பறித்த ஒரு விமான நிறுவனத்தின் உரிமையாளரின் மகன் ஏற்படுத்திய விபத்தில், அந்த நபரின் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. வாச்சாத்தியில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்ட காவல் அதிகாரிக்கு உறுதுணையாக நின்றார். காவல் அதிகாரிகளும் இன்னும் சிலரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது அடைந்த மகிழ்வை விவரிக்க வார்த்தையில்லை என்று போலீசார் பெருமையாக குறிப்பிட்டனர்.

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியாற்றியபோது, 25 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாடு காவல்படையினரைத் தேர்வு செய்ததில் பங்காற்றி இருக்கிறார். தூத்துக்குடியில் பணியாற்றியபோது சாதி கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதியை ஏற்படுத்தினார். தமிழக காவல்துறையில் நேர்மை, நியாயம் என்று கடைப்பிடித்ததில் ஒரு சிலரை மட்டுமே உதாரணமாக கூறுவார்கள். அதில் சுனில்குமாரும் ஒருவர் என்று காவலர்கள் கூறுகின்றனர்.


Tags : Supply ,CIT ,DGP ,Sunilkumar , Organ donor was the cause of awareness: Civil Supply CIT DGP Sunilkumar retired today
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...