×

கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்தது பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா

சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்தது. 11 பூசாரிகள் மட்டுமே தீ மிதித்த நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  கொரோனா தொற்று காரணமாக குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற்து. கடந்த 15ம் தேதி கோயிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இதை தொடர்ந்து வழக்கமாக சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. கடந்த 23ம் தேதி இரவு கோயிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதைத்தொடர்ந்து  இன்று அதிகாலை குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணிக்கு கோயிலிலிருந்து தாரை தப்பட்டை வாத்தியம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு சென்றனர். அங்கு பூஜை செய்து அங்கிருந்து படைக்கலத்துடன் மீண்டும் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர். இதைத் தொடர்ந்து கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் தலைமை பூசாரி ராஜேந்திரன் பக்திப்பரவசத்துடன் குண்டம் இறங்கினார். இதைத்தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் படைக்கல பூசாரிகள் என மொத்தம் 11 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து வீணை அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு குண்டம் திருவிழா தீமிதிக்கும் நிகழ்வு தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும். சுமார் 1.5  லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு 5 நிமிடத்தில் 11 பூசாரிகள் மட்டுமே இறங்கிய பின் விழா நிறைவு பெற்றது. பூசாரிகள் குண்டம் இறங்கியதைத்தொடர்ந்து பண்ணாரி அம்மனை தரிசிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஈரோடு எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 275 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினரும் பண்ணாரி அம்மன் கோயில் வளாகத்தில் முகாமிட்டிருந்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பண்ணாரி அம்மன் கோவில் இணை ஆணையர் சபர்மதி தலைமையில் கோயில்  பரம்பரை அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Tags : Ranjari Amman Temple Kundam festival , The Pannari Amman Temple Gundam Festival simply took place with restrictions
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...