உலகிலேயே பழமையான மொழி தமிழ்மொழி; நாட்டின் வளர்ச்சியே எங்கள் கூட்டணியின் நோக்கம்: தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

திருப்பூர்: நாட்டின் வளர்ச்சியே எங்கள் கூட்டணியின் நோக்கம் என தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டபேரவை தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 4ம் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரளாவின் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

இந்தக் கூட்டத்தில்  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் கலந்து கொண்டு பேசினர். பின்னர் பேசிய பிரதமர் மோடி; தமிழகத்துடைய இந்த பழமையான இந்த நகரத்துக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சுவாமி அகஸ்தீஸ்வரர் அருளாசி அளவிடக்கரியது. உலகம் முழுக்க மக்கள் அந்த கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி மிகச்சிறந்த மனிதர்களான திருப்பூர் குமரன், காளிங்கராயர், தீரன் சின்னமலை, தளபதி கொல்லன் போன்ற மிகச் சிறந்த மனிதர்களை கொடுத்தப் பகுதி, தமிழகத்தின் கலாச்சாரத்தில் இந்தியா பெருமைக் கொள்கிறது.

மிகச்சிறந்த பெண்மணிகளான ஆண்டாள், ஒளவையார் ஆகியோரின் லட்சியத்தால் நாங்கள் உத்வேகம் பெற்றிருக்கிறோம். உலகிலேயே பழமையான மொழி தமிழ்மொழி. தமிழக மக்கள் இந்தியாவிற்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான ரயில் பாதை அமைப்பது குறித்து ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறோம். தேவேந்திர குல வேளாளர் என்ற ஒற்றை பெயரின் கீழ் 7 சாதியினரை சேர்த்து சட்டம் இயற்றி உள்ளோம். எதிர்க்கட்சியினருக்கு ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு எதுவுமில்லை; அவர்கள் பொய் தான் பேசுகின்றனர்.

கோவையில் உருவாகும் ராணுவ தளவாட தயாரிப்பு தொழிற்சாலை மூலம் ஏராளமான தொழில்கள் தமிழகத்துக்கு வரவுள்ளன. காலாவதியான கொள்கைகளை கொண்ட கட்சி காங்கிரஸ். திருப்பூர் பகுதியின் சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதியாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதம மந்திரி மாத்ரூ வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் 10 லட்சம் பெண்கள் தமிழகத்தில் பேறுகால நிதியுதவி பெற்றுள்ளனர். தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையம் தமிழகத்தில் அமைய உள்ளது; இதன்மூலம், உலக அரங்கில் தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையமாக தமிழகம் இருக்கும்.

நான் உங்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வாங்கி விபரமாக படியுங்கள். பெண்களை வலுப்படுத்தவே பல திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். எளிதாக தொழில் தொடங்க பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் என கூறினார்.

Related Stories:

>